திருப்பத்தூர்: கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக அமைச்சரவையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நிலோபர் கபில். இவர் மீது கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி திமுக கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். பின்னர் நிலோபர் கபில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 26) மீண்டும் திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய நிலோபர் கபில் கடிதம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தன்னை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.
அதிமுக போட்டியிடும் வேட்பாளர் பசுபதி அறிமுக கூட்டம்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில் வேலூரில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக அதிமுக கட்சி உருவானது குறித்த குறும்படத்தை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி அதிமுக தொண்டர்களுக்குத் திரையிட்டுக் காட்டினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, "நமக்கு எதிரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என போட்டியிடுகிறார். மற்றொருவர் தனது மகனுக்கு மகுடம் சூட்டப் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் சுயநலத்திற்காக போட்டியிடுகின்றார்கள். வெற்றி பெற்றால் மக்களைக் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் நமது வேட்பாளர் மருத்துவர் பசுபதி மக்களுக்காகப் போட்டியிடுகிறார். இந்த முறை சிறுபான்மையினர் வாக்கு நமக்குத்தான்" என பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையும், "வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம் தான் இந்த நாடாளுமன்றத் தேர்தல். அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக, கருணாநிதி கையில் சிக்கி குடும்ப கட்சியாக மாறியுள்ளது. ஸ்டாலின், உதயநிதி, இன்ப நிதி என்று நிதி, நிதி என்று கூறி ஏமாற்றி வருகிறார்கள் என பேசினார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ரூ.582.95 கோடி வைத்துள்ள ஆற்றல் அசோக்குமார்.. ஈரோடு திமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு எவ்வளவு? - Aatral Ashok Kumar Assert