விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் தலைமையில், அதிமுக விழுப்புரம் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகளுடனான கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத சிறப்பு அதிமுகவுக்கு உண்டு. ஏனென்றால், லட்சத்திற்கும் மேற்பட்ட கிளைக் கழகங்கள் உள்ளன. தற்போதுள்ள ஆட்சியின் மீது மக்களுக்கு கடுமையான அதிருப்தி உள்ளது.
நம்முடைய ஒரே நோக்கம், தீய சக்தியாக இருக்கின்ற திமுக தமிழ்நாட்டைச் சூறையாடி, கொள்ளையடித்து அதன் மூலம் ஒரு குடும்பம் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். குறிப்பாக விலை வாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: தவெக தலைவர் விஜய் தருமபுரியில் போட்டி?.. மாவட்ட தலைவர் கொடுத்த அப்டேட்!
ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், லேப்டாப், ஸ்கூட்டி போன்ற திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ள செயலால் திமுக ஆட்சியில் கடுமையான அதிருப்தி உள்ளது. ரோபோவாக ரிமோட் ஆட்சி நடத்துகிறார் மு.க.ஸ்டாலின். மக்கள் விரோத செயலில் திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 15 மாதம் மட்டுமே இருப்பதால் திமுக என்கிற தீய சக்தியை வீட்டுக்கு அனுப்பக் கள ஆய்வு நடத்தப்பட்டது என்றார்.
தவெக கூட்டணி: விஜய் கட்சி தொடங்கி இருப்பதற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி தொடர்பான முடிவுகளை தலைமை தான் முடிவு செய்யும், அறிவிக்கும் என்றார். அதனைத் தொடர்ந்து, பாமக ராமதாஸ் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று கூறியது, அவருடைய கட்சி அதனால் அவருடைய கருத்தைத் தெரிவிக்கிறார்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்