சென்னை: தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எழுதித் தருகிறது. தமிழ்நாட்டில் 2017ஆம் ஆண்டு பாடப்புத்தகத்தை மாற்றம் செய்வதற்கு அறிவிக்கப்பட்டு, அதற்கான வரைவுகள் வெளியிடப்பட்டன. அதனைத் தாெடர்ந்து, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் பாடப்புத்தகம் அனைத்து வகுப்புகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் 'பன்முக கலைஞர்' என்ற தலைப்பில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தையும் பதித்துள்ளனர். பல்வேறு திறன்கள் மூலம் அரசியல் மற்றும் எழுத்து உலகிலும் சிறந்து விளங்கினார் என்பதன் அடிப்படையில், பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளனர்.
மேலும், ’உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்னும் கூற்றுக்கு சான்றாக வாழ்ந்த கருணாநிதி 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் நாள் தம் 94ஆம் வயதில் தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 10ஆம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் இயல் 6இல் பன்முக கலைஞர் என்ற தலைப்பில், பக்கம் 132-ல் கடைசிப் பத்தி வரி 11-ல் ஜூலை மாதம் 7ஆம் நாள் என்பதற்கு பதிலாக ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேடையில் கடுகடுத்த அமித்ஷா! தடுமாறிய தமிழிசை! என்ன நடக்கிறது பாஜகவில்? - Amitshah and Tamilisai