மதுரை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக நேரடி கள ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிர், இன்று (வியாழக்கிழமை) நரிமேடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் அவர் மேற்கொண்ட கள ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "கள்ளக்குறிச்சி விஷச் சாராயத்தால் தற்போது வரை 64 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் உயரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்தபோது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகச் சென்று இனி ஒரு சொட்டு கள்ள சாராயம்கூட விற்பனை நடக்காது என கூறினார்.
ஆனால், தற்போது கள்ளச்சாராய விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதர்சேரி ஆகிய பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டோம். கருணாபுரத்தில் காவல்நிலையம், நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம் அருகே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுள்ளது.
இதில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது. இந்த மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். மருத்துவமனையில் RED ZONE மற்றும் DARK ZONE வார்டுகளில் அதிக பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் அதிகரிப்பை தாமதமாக அறிவிக்க மக்களை திசை திருப்புகின்றனர்" எனக் கூறினார்.
கள்ளச்சாராய விற்பனை எப்படி நடைபெற்றது? தொடர்ந்து பேசிய அவர், "கள்ளக்குறிச்சியில் மொத்த வியாபாரியிடம் இருந்து சில்லறை வியாபாரிகளுக்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பாக்கெட் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாலை 4 முதல் 7 மணி வரை விற்பனை நடைபெற்றுள்ளது.
நாள்தோறும் காவல்துறையினர் தூரமாக நின்று லஞ்சம் வாங்கவிட்டுச் சென்றுள்ளனர். கடந்த 18ஆம் தேதியே கள்ளச்சாராயம் அருந்தி இருவர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அப்போது மாவட்ட ஆட்சியர் கள்ளச்சாராய அருந்தியதில் மரணம் ஏற்படவில்லை எனக் கூறியுள்ளார். பட்டியிலின மக்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகளை குறிவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
உளவுத்துறைக்கு கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தெரியாதா? இது குறித்து புகார் அளித்தால் புகார்தாரரை வீடு தேடி வந்து மிரட்டிச் செல்லும் வகையில் முதலமைச்சரின் கீழுள்ள காவல்துறை செயல்பட்டு வருகிறது. மரணத்திற்கு பொறுப்பு என்பதனால்தான், 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்கியுள்ளனர்.
மேலும், நாங்கள் கள ஆய்வுக்குச் சென்றபோது மருத்துவமனையின் ICU வார்டுக்குள் எங்களை அனுமதிக்கவில்லை. எங்கள் குழுவை காவல்துறையினர் பின் தொடர்ந்து வருகின்றனர். எங்களை ஆய்வுக்குச் செல்ல விடாமல் தடுக்க வேண்டும் என எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சரிடமிருந்து உத்தரவு வந்துள்ளதாக தகவல் வந்தது.
அடுத்து என்ன நடக்க வேண்டும்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஒரு விசாரணைக் குழு உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும். சிபிசிஐடி விசாரணை வெளிப்படையாக இருக்காது, காவல்துறையை காட்டிக்கொடுக்க மாட்டார்கள். சிபிஐ விசாரணையையும் நம்ப முடியாது.
கள்ளச்சாராயம் விவகாரத்தில் இறந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளையும், சங்கிலித் தொடர் குற்றவாளிகளையும் கண்டறிய வேண்டும்.
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம், கருத்துகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும். கள்ளச்சாராய விற்பனை, போதைப்பொருள் விற்பனை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனை குறித்து முழுமையாக ஆய்வுசெய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மனித உரிமை ஆணையம் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும்" எனக் கூறினார்.
மேலும், கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஏன் முதலமைச்சர் சந்திக்கவில்லை? அரசியலுக்காக டெல்லி செல்லும் முதலமைச்சர் சொந்த மாநில மக்களைச் சந்திக்காததது ஏன்? மத்திய அரசைச் சார்ந்தவர்களும் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை? கள்ளக்குறிச்சி விவகாரத்தில் குழந்தைகள் நல ஆணையமும் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மூடப்படுகிறதா 1.50 லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்கள்? தன்னார்வலர்கள் கவலை!