திருநேல்வேலி: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், தற்போது தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தாமரை சின்னத்தில் வாக்குகளை சேகரித்து வருகிறார். இந்தநிலையில் நயினார் நாகேந்திரனிடம், தமிழக அரசியல் களம், பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடககத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
மூன்றாவது முறை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று ஆளும் கட்சியினரும், நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்க்கட்சியினரும் பேசி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் எப்படி இருக்கிறது?:
திருநெல்வேலி தொகுதியை பொருத்தமட்டில் இன்று 2வது நாளாகப் பிரசாரம் மேற்கொள்கின்றோம். எல்லா கிராமங்களில் பாஜகவிற்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. மேலும் எங்களுடைய தோழமை கட்சிகள் எங்கள் உடன் நிற்கின்றனர். வேறு எந்த கட்சியும் களத்தில் இருப்பது போன்று தெரியவில்லை
கடந்த இரண்டு தேர்தல்களில் மோடி அலை பாஜகவின் வெற்றிக்கு பெரிதும் உதவியது இந்த முறையும் மோடி அலை வெற்றிக்கு உதவும் என நினைக்கிறீர்களா?:
கடந்த ஆண்டுகளை விட தற்போது மோடியின் புகழ் அனைத்து இடங்களுக்கும் சென்றிருக்கிறது. கிராமங்கள் உள்ள குழந்தைகள் வரை மோடியை தெரிந்து வைத்துள்ளனர். எனவே வெற்றி எங்களுக்கு சாதகமாக உள்ளது
தற்போது நீங்கள் பாஜகவில் போட்டியிட்டாலும் இன்று வரை கிராமங்களில் உங்களை அதிமுகவின் முகமாகவே பலர் பார்க்கின்றனர். இதுபோன்ற நிலையில் எம்ஜிஆர் பாடல்களை அவரது உருவப்படத்தையும் பிரச்சாரத்தில் பயன்படுத்துவது மூலம் அதிமுக வாக்குகளை குறி வைக்கிறீர்களா?:
எல்லா வாக்குகளும் எங்களுக்கு தான் குறிப்பாக அதிமுகவில் முக்கிய பங்கு வகித்த டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் எங்கள் கூட்டணியில் உள்ளனர் எனவே வெற்றி எங்களுக்கு தான் பிரகாசமாக இருக்கிறது.
இம்முறை எதை முன்வைத்து பிரச்சாரம் செய்வீர்கள்?:
பிரதமரின் நலத்திட்டங்களை அனைத்து கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். இதையே முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.
தொடர்ச்சியாக சமுதாய தலைவர்கள் சந்தித்து வருகிறீர்கள் இதன் மூலம் சமுதாய ஓட்டுகளை வாங்க நினைக்கிறீர்களா?
அப்படி இல்லை, பொதுவாக அனைத்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளையும் சந்தித்து வருகின்றேன். அனைத்து தரப்பை சேர்ந்தவர்களின் ஆதரவும் எனக்கு வேண்டும் என்பதால் தான் அனைவரையும் சந்திக்கிறேன் என தெரிவித்தார்.
யார் இந்த நயினார் நாகேந்திரன்?: ஆரம்பத்தில் ஒரு தீவிர அதிமுக நிர்வாகியாக அறியப்பட்டவர். அதிமுகவில் எம்ஜிஆர் காலத்திலிருந்து பயணித்த நயினார், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். கட்சி தவிர தனிப்பட்ட முறையில் மாவட்ட முழுவதும் தனக்கான தனி செல்வாக்கை பதித்தவர். நெல்லை மக்கள் இவரை செல்லமாக 'பண்ணையார்' என்று அழைப்பார்கள். பாஜகவில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இணைந்த நயினார் நாகேந்திரன் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.
அப்போது அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்ததால் நயினார் நாகேந்திரன் கூட்டணிக் கட்சிகள் ஆதரவோடு எளிதில் வெற்றி வாகை சூடினார். அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வென்று எம்பியாக வேண்டும் என்ற கனவில் நயினார் நாகேந்திரன் இருந்து வருகிறார்.
கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பே இதற்கான திட்டங்களை தீட்டி வந்த நாகேந்திரன். கடந்த முறை போல இந்த முறை வெற்றி எளிதாகி விடும் என்று நினைத்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அதிமுக-பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. இருப்பினும் நாகேந்திரன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதே சமயம் பாஜகவின் பிரதிநிதியாக அவர் அறியப்பட்டாலும், இன்றளவும் கிராமங்களில் நயினார் நாகேந்திரன் என்றாலே அதிமுககாரன் என்று பேசும் அளவிற்கு பரிச்சயமானவர்.
இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி எம்ஜிஆர் பாடல்களையும் அவர் உருவப் படத்தையும் பிரச்சாரத்தில் பயன்படுத்தி வருகின்றார். இதன் மூலம் அவர் அதிமுக வாக்குகளை குறி வைப்பதாக பேசப்படுகிறது. இந்த வியூகம் ஓட்டாக மாறுமா? என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சராக தயாராகும் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி? ஆம் ஆத்மியிலும் குடும்ப ஆட்சி - வானதி சீனிவாசன் - Vanathi srinivasan