ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணா (80). இவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், இவரது மகள் வளர்மதி இவரை கடந்த மே 27ஆம் தேதி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனை வளாகத்தில் இருந்து அவரை சிகிச்சைக்காக விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்வதற்காக அங்கிருந்த ஊழியரிடம் ஸ்ட்ரெச்சர் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் யாரும் ஸ்ட்ரெச்சர் வழங்காத நிலையில், காயம் அடைந்த தனது தாயை, வளர்மதி சிறிது தூரம் தூக்கிச் சென்று, அவசர சிகிச்சைப் பிரிவில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், மூதாட்டியை மகள் தூக்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, மாவட்ட சுகாதார இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், இந்தச் சம்பவம் குறித்து பணியில் இருந்த ஊழியர்கள், மருத்துவர்கள் ஆகியோருடன் இன்று (மே 29) விசாரணை நடத்தினார்.
மேலும், மருத்துவமனை கண்காணிப்பாளர், உறைவிட மருத்துவ அலுவலர் ஆகிய இருவருக்கும் விளக்கம் அளிக்கக் கோரி மெமோ வழங்கியுள்ளார். இந்நிலையில், இணை இயக்குனர் அம்பிகா, பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளை தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகளை கேட்டறிந்தார். மேலும், பணியில் இருந்த ஊழியர்கள், மருத்துவர்களையும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் வளர்மதி, சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகளை இணை இயக்குனரிடம் தெரிவித்துள்ளதாகவும், அன்றைய தினம் தாயை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சர் கேட்டபோது வழங்கவில்லை எனவும் கூறியதாக தெரிவித்தார்.
இதன் பின்னர் விசாரணை முடிந்து வெளியே வந்த இணை இயக்குனர் அம்பிகா செய்தியாளர்களிடம் பேசுகையில், “விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பணியில் இருந்து மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினேன். உண்மையாகவே என்ன நடந்தது என்று நாளை விசாரணை முடிவில் சொல்லப்படும். யார் தவறு செய்தார்கள் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் போதிய அளவில் ஊழியர்கள், மருத்துவர்கள் உள்ளனர், பற்றாக்குறை இல்லை. மருத்துவமனை நிர்வாகம் செயல்பட உத்தரவாதம் அளிக்கிறேன். எத்தனை பேரிடம் இது குறித்து விசாரணை செய்தோம் என்று விசாரணை முடிவில் தெரியப்படுத்தப்படும். மேல் அதிகாரிகள் உத்தரவின்பேரில், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் இந்த பிரச்னை நிகழாத வகையில் போதுமான வழிமுறைகள் பின்பற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்படும்” எனக் கூறினார்.