ஈரோடு: தம்பதி இடையில் ஏற்பட்ட தகராறில், தந்தை திடீரென அருகில் இருந்த துணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நிலையில், அவர்களது நான்கு வயது மகன் மீது தீ பரவி, ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் திருமலை செல்வன் என்பருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். திருமலை செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால், ஒரு மாதத்திற்கு முன்பு திருமலை செல்வனின் மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, தன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். தொடர்ந்து தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி, அங்கிருந்து சாயப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 9) திங்கட்கிழமை, திருமலை செல்வன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த திருமலை செல்வன், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை வீட்டில் இருந்த துணிகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதனைக் கண்டு பதறிய மனைவி, குழந்தைகளை பத்திரமாக மீட்க முயன்றுள்ளார். அதில், பெண் குழந்தையை அவர் காப்பாற்றிய நிலையில், நான்கு வயது ஆண் குழந்தையின் மீது தீ பரவியுள்ளது.
உயிருக்கு போராடிய மகனை மீட்ட தாய், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு, குழந்தைக்கு 70 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. நெருங்கிய உறவுக்கார இளைஞர் வெறிச்செயல்!
இந்த சம்பவத்தில் திருமலை செல்வனின் உடலிலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து குழந்தைகளின் தாய் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்று வழக்குப் பதிவு செய்த காவல்துறை, திருமலை செல்வனை உடனடியாக கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, திருமலை செல்வன் மனைவி பேசும் வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ பதிவில், மகனை மடியில் படுக்கவைத்திருக்கும் அவர், “என்னை என் கணவர் ரொம்ப துன்புறுத்துகிறார். அவர் கொஞ்ச நாள் சிறையில் இருக்கட்டும். அப்போது தான் குழந்தைகள், குடும்பத்தின் அருமை தெரியும். மகளை காப்பாற்றும் முயற்சியில் என் மகனை விட்டுவிட்டேனே,” என்று கதறி அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவத்தில், திருமலை செல்வன் மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.