ஈரோடு: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்.19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 உடன் 7 கட்டமாக நடைபெற்று முடிந்தது. இதில் ஈரோடு தொகுதியில் 31 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என 32 நபர்கள் போட்டியிட்டனர்.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக வேட்பாளராக பிரகாஷ், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார், தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஜயகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன் ஆகியோர் போட்டியிட்டனர்.
ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளில், மொத்த வாக்காளர்கள் 15,38,778 நபர்களில் 10,86,287 பேர். அதாவது 70.59% பேர் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு அடுத்த சித்தோடு அருகே உள்ள அரசு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் 3 அடுக்கு போலீசாரின் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டு, பூட்டி சீல் இடப்பட்டது.
இந்த வளாகம் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் என அனைத்து பகுதிகளிலும் 220 மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வேட்பாளர்கள் முகவர்கள் மற்றும் அதிகாரிகள் என 24 மணி நேரம் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் இருப்பதாக, ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
வாக்கு என்னும் மையமான அரசு பொறியியல் கல்லூரி முன் நுழைவு வாயிலின் வழியாக வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் செல்வதற்கு தனியாக மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.டி.டி கல்லுாரியின் உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பிற்காக ஆயுதப்படை காவலர்கள், உள்ளூர் காவலர்கள், ஊர் காவல் படையினர் என மொத்தம் 900 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே பேரிக்காடு அமைத்தல், வாகன தணிக்கை செய்தல், வாகன நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி, குடிநீர், 24 மணி நேரமும் தடை இன்றி மின்சாரம் ஆகிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்! - Kalakshetra Issue