ஈரோடு: நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், அஞ்சல் வழியாக வாக்களிப்பதற்கு மார்.25 ம் தேதிக்குள், படிவம் 12Dயை பூர்த்தி செய்து வழங்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அஞ்சல் வழியில் வாக்களிப்பதற்குரிய நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், “சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தைப் பெறுவதற்கு வசதியாக அவர்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12D மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருகை தருவார்கள்.
அவ்வாறு தங்களது இல்லங்களுக்கு வருகை தரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தைப் படித்துப் பார்த்தோ அல்லது படிக்கக் கேட்டோ, ஆதாரங்கள் ஏதும் கோரும் பட்சத்தில் அதன் நகலைச் சமர்ப்பித்து, ஒப்பம் செய்து தங்களது ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கலாம்.
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஜன.22 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் வாக்காளர்களின் எண்ணிக்கை 39 லட்சத்து ஆயிரத்து 167 ஆகும். மேற்கண்ட மொத்த வாக்காளர்களில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 11 ஆயிரத்து 369 நபர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 63 ஆயிரத்து 751 நபர்களும் உள்ளதாகத் தெரிய வருகிறது.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ, சென்னை மக்களவைத் தொகுதிகளுக்குரிய தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலோ, தங்கள் பகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கோ சென்று வரும் மார்ச்.25 ம் தேதிக்குள் படிவம் 12Dயை இதற்கென பிரத்தியேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து சமர்ப்பித்து வரும் தேர்தலை சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்திட உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள், அஞ்சல் வழியில் வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இருக்கும் பட்சத்தில், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைப்பேசி எண்கள் 1950 மற்றும் 1800 425 7012 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
அந்த வகையில் ஈரோட்டில் விருப்பம் தெரிவித்த வாக்காளர்களுக்கு, விண்ணப்பத்தினை பெறும் பணியினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் ஈரோடு பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் 87 வயது ஜெயலட்சுமி என்பவர் வீட்டிற்கு நேரில் சென்று தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவிக்கும் 12D படிவத்தைப் பெற்றார்.
இதையும் படிங்க: நாளை வேட்பு மனுத்தாக்கல்.. வேட்பாளர்களுக்கான விதிகளை அறிவித்த தேர்தல் அலுவலர்!