திருவண்ணாமலை: நீர்வளத்துறை அதிகாரிகள் பேச்சை கேட்காமல், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுத்தோம் கவிழ்த்தோம் என கட்டியதன் விளைவாகத் தான் பாலம் சேதம் அடைந்துள்ளதாகவும், திமுக அரசு என்றாலே கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் தான் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு தாலுகாவிற்கு உட்பட்ட அகரம் பள்ளிப்பட்டு தொண்டைமானூர் இடையே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் கடந்த இரண்டாம் தேதி நள்ளிரவில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. அதனை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்து, திருவண்ணாமலை மலைச்சரிவின் உயிரிழந்த 7 பேர் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் என ஏழு லட்சம் நிதியதவி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "நீர்வளத்துறை அதிகாரிகள் இந்த பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும், அதிக தூண்களை அமைக்க வேண்டும் எனவும் கருத்தை தெரிவித்துள்ளனர். அதனைக் கருத்தில் கொள்ளாமல், இதற்கு முன்னதாக எவ்வளவும் தண்ணீர் சென்றது என்றெல்லாம் கணக்கிடாமல் நெடுஞ்சாலைத்துறை அவசர கோலத்தில் எடுத்த முடிவு தான், கடந்த 2ம் தேதி தென்பண்ணை ஆற்றில் அதிக வெள்ளம் சென்ற போது அடித்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க: "ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.944 கோடி கொடுத்ததே மிகப்பெரிய விஷயம் ஆச்சே" - உதயநிதி பெருந்தன்மை!
கடந்த 1972ஆம் ஆண்டு, சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில், சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நெடுஞ்சாலை துறையினர் பாலத்தை வடிவமைத்து கட்டியிருக்க வேண்டும். ஆனால், ஒரு லட்சம் கன அடி நீர்வரத்து செல்லும் அளவிற்கு மட்டுமே பாலத்தை கட்டியுள்ளனர். இதனால், தான் பாலம் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க அரசினுடைய குறைபாட்டின் காரணமாகவும், துறையினுடைய குறைபாட்டின் காரணமாகவும் நடந்தது. இதனால், மக்களின் வரிப்பணம் 16 கோடி ரூபாய் வீணாகி உள்ளது. அனைத்து கட்டுமானமுமே தரம் கிடையாது. இந்த ஆட்சியின் நோக்கம் கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன். அதற்கு தென்பண்ணை ஆற்றில் கட்டப்பட்டு அடித்துச் செல்லப்பட்ட பாலம் சாட்சி" எனக் குற்றச்சாட்டினார்.