நீலகிரி: உதகமண்டலம் அருகே உள்ள எப்பநாடு கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அருகே கொரனூர் மற்றும் பிக்கபத்திமந்து என்ற பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த இரு கிராமங்களிலும் தலா 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
முன்னதாக, உதகமண்டலத்தில் இருந்து எப்பநாடு கிராமம் வரை மட்டுமே அரசுப் பேருந்து இயக்கப்பட்டது. எப்பநாடு கிராமத்தில் இருந்து கொரனூர் பகுதியானது ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இதனால் கொரனூர் கிராம மக்கள், உதகமண்டலத்திற்குச் சென்று திரும்பும் போது, எப்பநாட்டில் இறங்கி 1 கி.மீ தூரம் வனத்தின் நடுவே உள்ள சாலையின் வழியாக நடந்து, தங்கள் கிராமத்திற்கு வந்தனர்.
இதன் காரணமாக, கொரனூர் பகுதிக்கு பேருந்து இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், எப்பநாடு வரை சென்ற அரசுப் பேருந்தை கொரனூர் வரை நீட்டித்து அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எப்பநாடு மக்கள் நேற்று (பிப்.28) தங்களது கிராமத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எப்பநாடு கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டம் காரணமாக, நேற்றிரவு உதகமண்டலத்தில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து, எப்பநாடு மற்றும் கொரனூர் ஆகிய இரு கிராமங்களுக்கும் இயக்கப்படாமல் பாதி வழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் வழக்கம்போல் எப்பநாடு கிராமத்திற்கு பேருந்து இயக்கப்பட்டது.
இதையும் படிங்க: இமாச்சல் பிரதேசத்தில் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம்: சபாநாயகர் அதிரடி உத்தரவு!