சென்னை: பள்ளிக்கரணை அடுத்த தரமணியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தவர் தினேஷ் குமார் (30). இவர் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் கழிவுநீரை சுத்திகரித்து மறு உபயோகப்படுத்தும் பணிகளைச் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று பணிகளை முடித்துவிட்டதாக தனது அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து, சிறிது நேரம் கழித்து அதே அலுவலகத்தில் பணிபுரியும் தமீன் என்பவர் வந்து பார்த்தபோது, தினேஷ் குமார் கழிவுநீர்த் தொட்டியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தமீன் உடனடியாக மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தினேஷ் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், உயிரிழந்த தினேஷ் குமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்