சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், யூடியூப் மூலம் பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் லிப்ரா புரோடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தற்போது ரவீந்தர் சந்திரசேகர் சென்னை அசோக் நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை முதல் ரவீந்தரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவீந்தர் சந்திரசேகர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்யலாம் என பாலாஜி என்பவரை அணுகி 16 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ரவீந்தர் ஜாமினில் வெளிவந்தார்.
16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சட்ட விரோத பணம் பரிமாற்றம் நடந்திருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் தான் சோதனை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு இதில் முக்கிய ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்பட்டதா?, சோதனைக்கான முழு காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்து தயாரிப்பாளர் ரவீந்தரின் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: சென்னை ஐஐடி பெண் ஆராய்ச்சியாளரிடம் ரூ.84.5 லட்சம் அபேஸ்.. போலீஸ் வலையில் சிக்கியது எப்படி? - Man arrested for defrauding