சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2வது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “வேலை வாங்கி தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2021ல் சமரசம் ஏற்பட்டதாக ஒரு வழக்கு மட்டும் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
அதை மீண்டும் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். உதவியாளர் சண்முகம், சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக உள்ளனர்.
செந்தில் பாலாஜியை ஜாமீனில் வெளிவர அனுமதித்தால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு உள்ளது. நேரடியாகவோ? தூண்டுதல் காரணமாகவோ பண மோசடியில் ஈடுபட்டதாகக் கருதினால் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். வேலை வாங்கி தருவதாக ஒரு குழு அமைத்து, நடத்துநருக்கு 1.5 லட்சமும், ஓட்டுநருக்கு 2 லட்சம் ரூபாய் என சுமார் 67 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.
நேரடி ஆவணங்கள் எதுவும் இல்லை, பென்டிரைவ் ஆவணங்களாக மட்டுமே உள்ளது. 2020ல் எம்டிசியிடம் இருந்து சிபிசிஐடி காவல்துறை பணப்பரிமாற்றத்துக்கான ஆவணங்களைப் பறிமுதல் செய்தது. 2020ல் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தடயவியல் சோதனை செய்யப்பட்டு உறுதிப் படுத்தப்பட்டது. 16 ஆவணங்கள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. எந்த ஆவணங்களும் திருத்தப்படவில்லை.
கைப்பற்றப்பட்ட பென்ட்ரைவில் இருந்து கோப்புகளில் முதலில் 284 கோப்புகள் சோதனைக்காக அனுப்பப்பட்டது. பின்னர், சோதனைக்கு என மொத்தமாக 472 கோப்புகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு உதவியாளராகச் சண்முகம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்படவில்லை என்றாலும், மறைமுகமாக உதவியாளராகச் செயல்பட்டுள்ளார்.
மின்னஞ்சல் ஆவணங்களில் தன்னை அமைச்சரின் உதவியாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். 2000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு முறைகேடு நடந்துள்ளது. மோசடியாகப் பெறப்பட்ட 67 கோடி ரூபாய் பணம், எங்கே சென்றது என்பது தெரியவில்லை. 2014, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் வங்கி வைப்புகள், பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது.
குற்ற முகாந்திரம் இருந்தால் அமலாக்கத்துறை விசாரணை செய்ய அதிகாரம் உள்ளது. குறிப்பிட்ட வழக்கை விசாரிக்க வேண்டும் என எல்லை கிடையாது. குற்றம் செய்யவில்லை என நீதிமன்றம் கருதினால், ஜாமீன் வழங்கலாம். ஆனால், செந்தில் பாலாஜி மீது 30 வழக்குகளில் குற்றவாளியாக இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார். பின்னர், செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிப்ரவரி 19ம் தேதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: Myv3 Ads நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தின் காவல் நீட்டிப்பு - விசாரணையில் என்ன தகவல் வெளியானது?