கோயம்புத்தூர்: தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை சோதனை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான புகார் தொடர்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நேற்று (மார்ச் 9) நடைபெற்றது. அந்த வகையில், கோவை ராமநாதபுரம் அடுத்த கிருஷ்ணசாமி நகரில் கார் ஷோரூம் உரிமையாளர் அனீஸ் என்பவரது இல்லம் உள்ளது.
இவரது வீட்டுக்கு காலை 8 மணியளவில் 3 கார்களில் வந்த 15க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். காலையில் தொடங்கிய இந்த சோதனையில் வீட்டில் உள்ள பல்வேறு ஆவணங்களைக் கொண்டு விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், கடந்த ஜனவரி மாதம் விசிகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனுக்கு, விசிகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இவரது வீட்டில் ஏற்கனவே நேற்று அமலாக்கத்துறையினர் சோதனையின் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆதவ் அர்ஜுனாவிற்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டன், கஸ்தூரி ரங்கன் சாலையில் இயங்கி வரும் அரைஸ் நிறுவன அலுவலகம் ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள ஆதவ் இல்லம், அவருடைய மற்றொரு வீடான ஸ்போர்ட்ஸ் கிளப் பகுதியில் உள்ள வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 10) காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இது குறித்தான முழு விவரம் எதையும் அமலாக்கத்துறையினர் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க: பாமக, விசிகவினர் மோதல்; திண்டிவனம் மயான கொள்ளை ஊர்வலத்தில் பதற்றம்.. போலீசார் தடியடி