திருநெல்வேலி: தமிழ்நாடு காவல்துறையின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வலம் வந்தவர், வெள்ளத்துரை. அயோத்தி குப்பம் வீரமணி உள்பட பல ரவுடிகளை வெள்ளத்துரை என்கவுன்டர் செய்துள்ளார். அவர் இறுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்ற ஆவண காப்பக்கத்தில் கூடுதல் எஸ்பியாக (ASP) பணிபுரிந்தார். இந்த நிலையில், நேற்று அவர் பணி ஓய்வு பெற்ற நிலையில், நேற்று முன்தினம் திடீரென வெள்ளத்துரையை தமிழ்நாடு அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இவ்வாறு வெள்ளத்துரை திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறை வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்தது. இதன் பின்னால் நிகழ்ந்தது என்னவென்று விசாரிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற லாக்கப் டெத் வழக்கு ஒன்றில் வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
அதேநேரம், வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து நேற்று வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து நிம்மதி அடைந்த வெள்ளத்துரை, காவல்துறை பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
யார் இந்த வெள்ளத்துரை? நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, ஆரம்பத்தில் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்தவர். பின்னர் அந்த பணியில் இருந்து விலகி, அரசு வேலை மோகத்தில் காவல் துறையில் வேலை தேட ஆரம்பித்தார். அந்தச் சூழலில் தான், கடந்த 1997ஆம் ஆண்டில் வெள்ளத்துரை தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளராக தனது பணியைத் தொடங்கினார் . முதலில் அரசு வேலைக்காக பணியில் சேர்ந்த வெள்ளத்துரை, காக்கிச் சட்டை அணிந்த உடன் முழுமையாக அப்பணியை நேசிக்கத் தொடங்கினார்.
இந்த நிலையில் தான், கடந்த 1998ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம், பாலக்கரை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தபோது, பிரபல ரவுடி ஒருவரின் கூட்டாளியான ஜான் என்பவர் போலீஸ் காவலில் இருந்து தப்பி ஓட முயன்றபோது, தற்காப்புக்காக வெள்ளத்துரை ஜானை துப்பாக்கியால் சுட்டார். இதுதான் வெள்ளத்துரை செய்த முதல் என்கவுண்டர். அடுத்ததாக, 2003ஆம் ஆண்டு சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி அயோத்திக்குப்பம் வீரமணியை வெள்ளத்துரை என்கவுண்டர் செய்தார்.
தொடர்ந்து, 2004ஆம் ஆண்டு தமிழ்நாட்டையே ஆட்டி படைத்து வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுண்டர் நடைபெற்றது. இந்த என்கவுண்டர் குழுவில் வெள்ளத்துரை முக்கிய இடம் பிடித்திருந்தார். அடுத்தடுத்து என்கவுண்டர் செய்வதில் வல்லவராக திகழ்ந்த வெள்ளத்துரையை, தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகள் சவாலான பல முக்கிய வழக்குகளில் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக, காவல்துறைக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ரவுடிகளை ஒடுக்க வெள்ளத்துரை ஸ்பெஷல் ஆபீசராக பயன்படுத்தப்பட்டார் என்றே கூறலாம்.
மேலும், அடுத்தடுத்த என்கவுண்டர் சம்பவங்களால் வெள்ளத்துரை விரைவில் பதவி உயர்வும் பெற்றார். தனது 27 வருட காவல்துறை பணியில் வெள்ளத்துரை 12 என்கவுண்டர் செய்துள்ளார். எனவே தான் வெள்ளத்துரை தமிழ்நாடு காவல்துறையின் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்டார். மேலும், காவல்துறை அதிகாரிகள் இவரை டிரபிள் சூட்டர் என்றும் அழைப்பதுண்டு.
அரசியலில் கால் பதிக்கிறாரா வெள்ளத்துரை? நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்துரையின் மனைவி ராணி ரஞ்சிதம் அரசியலில் இருந்து வருகிறார். அவர் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இவ்வாறு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரியின் மனைவி களம் இறங்கியது நெல்லை தேர்தல் களத்தில் கவனத்தை ஈர்த்தது.
அதேநேரம், அப்போது வெள்ளத்துரை நெல்லை மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். மனைவி அதே மாவட்டத்தில் தேர்தலில் நிற்பதால் வெள்ளத்துரை அப்போது இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், 2021 தேர்தலில் வெள்ளத்துரை மனைவி ராணி ரஞ்சிதம் தோல்வி அடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் பெரிய அளவில் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், மனைவி வழியில் வெள்ளத்துரையும் ஒய்வுக்குப் பிறகு அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியானது. குறிப்பாக, மனைவி இருந்து வரும் அதே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வெள்ளத்துரை இணையலாம் என்றும் ஒரு பேச்சு பரவி வருகிறது.
இது குறித்து ஈடிவி பாரத் வெள்ளத்துரையை அணுகி குழப்பத்தை தீர்க்க எண்ணியது. இதன்பேரில், திருவண்ணாமலையில் இருந்த வெள்ளத்துரை தொலைபேசி வாயிலாக நமது கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார். அப்போது, பணி ஓய்வுக்குப் பிறகு மக்கள் சேவை செய்ய ஏதாவது திட்டம் வைத்துள்ளீர்களா என்ற கேள்விக்கு, “பணி ஓய்வுக்குப் பிறகு நெல்லையில் குடியேற இருக்கிறேன். ஓய்வுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என இன்னும் ஒரு வாரத்தில் முடிவெடுப்பேன். தொடர்ந்து மக்கள் சேவை செய்ய விரும்புகிறேன்” என பதிலளித்தார்.
இந்த பதிலில் ஒரு மறைவான பதில் ஒளிந்துள்ளதை அறிந்த ஈடிவி பாரத், அடுத்ததாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் உங்கள் மனைவி போட்டியிட்டார். எனவே, ஒய்வுக்குப் பிறகு நீங்களும் மனைவியுடன் இணைந்து அரசியலில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியை முன் வைத்தது. அதை உடனே சொல்ல முடியாது, இப்போதைக்கு இல்லை என பதில் அளித்த வெள்ளத்துரை, ஆனால் அரசியலுக்கு வரலாம் வராமலும் இருக்கலாம் என சூளுரைத்தார். மேலும், சென்னைக்கு சென்றுவிட்டு ஒரு வாரத்திற்கு பிறகு இது குறித்து முடிவெடுப்பேன் எனவும், நிச்சயம் ஏதாவது பணியில் ஈடுபடுவேன் எனவும் கூறினார்.
தொடர்ந்து, காவல்துறையில் நீங்கள் ஒரு கவனிக்கக் கூடிய அதிகாரியாக இருந்தீர்கள், உங்களைப் போன்று காவல்துறை பணிக்கு வரும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, “கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே. சரியான முறையில் நடந்து கொண்டால் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை நமக்கு துணையாக இருப்பார்கள். பயப்படக்கூடாது, சிலர் பயமுறுத்துவார்கள், லத்தியை எடுத்தால் ஏதாவது ஆகிவிடுமோ என பயமுறுத்துவார்கள். லத்தி எதற்காக கொடுத்துள்ளார்கள்? கிரிமினல்களை அடிக்கத்தானே..
துப்பாக்கி எதற்காக கொடுத்தார்கள், சுடத்தானே.. சுடக்கூடாது, அடிக்கக்கூடாது என்றால் இரண்டையும் பிடுங்கி வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் ரவடிகள் பொதுமக்களை விரட்டினார்கள், தற்போது போலீசாரை விரட்டுகிறார்கள். போலீசாருக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றால், அவர்கள் கையை கட்டிப் போடக்கூடாது. ரவுடிகளைச் சுட வேண்டும், அடிக்க வேண்டும், அவர்கள் மீது இரக்கப்படக்கூடாது” என்ற கம்பீர பதிலை அளித்தார்.
மேலும், நீங்கள் என்ன நோக்கத்திற்காக காவல்துறை பணியில் சேர்ந்தீர்கள், அந்த நோக்கம் நிறைவடைந்ததா என கேட்கப்பட்டது. அதற்கு, “என்னைப் பொறுத்தவரை லட்சியத்தோடு நான் உள்ளே வரவில்லை. வேலை கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் வந்தேன். ஆனால், உள்ளே வந்த பிறகு முழு ஈடுபாட்டுடன் பணிபுரிந்தேன். காவல் பணி மீது எனக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. மக்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போன்று அதை கையாண்டேன். எனவே, எனது பணியில் நான் முழு திருப்தி அடைகிறேன்” என பதிலளித்தார்.
இறுதியாக, கடைசி காலகட்டத்தில் சஸ்பெண்ட் சர்ச்சையால் இக்கட்டான சூழலைச் சந்திக்க வேண்டி இருந்ததே, அதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. “இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை, இதுவும் ஒரு அனுபவம் தான். அதிகாரிகள் என்னை விட்டுக் கொடுக்கவில்லையே, மூத்த அதிகாரிகள் எனக்கு துணையாக இருந்தார்கள். அனைவரும் எனக்கு ஆதரவு தந்தார்கள். தனது வேலையைச் சரியாக செய்தால் மரியாதை கிடைக்கும். நான் எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினேன். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. நான் என்கவுண்டரில் ஸ்பெஷலாக இருப்பதைப் போன்று சிலர் புலன் விசாரணையில் திறமையாக இருப்பார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க: என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் ரத்து.. காரணம் இது தானா? - Velladurai Allowed To Retire