கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ள கோவை வனக்கோட்டம் 694 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. கோவை வனக்கோட்டத்தில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாய்க்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் காட்டு யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக காட்டு யானைகள் அதிகளவில் இருப்பதோடு, வலசை செல்லும் யானைகளும் வந்து செல்கின்றன. இதனிடையே உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைவது அடிக்கடி நடந்து வருகிறது. இதன் காரணமாக பயிர் சேதங்களும், மனித - யானை மோதல்களும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மனித - யானை மோதல்கள் குறைந்துள்ளதாகவும், குடியிருப்பு பகுதிகளில் யானை முகாமிடுவது குறைந்துள்ளதாகவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2019 முதல் 2024 வரையிலான ஆறு ஆண்டு காலத்தில் பல்வேறு காரணங்களால் 98 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த காலகட்டத்தில் காட்டு யானைகள் தாக்கியதில் 73 மனிதர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்காக 4 கோடியே 4 லட்சத்து 75 ஆயிரத்து 227 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆண்டுதோறும் 2500 முதல் 3000 முறை காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்துள்ளன. கடந்த 2023-ஆம் ஆண்டில் மொத்தம் 23 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. அதேபோல காட்டு யானைகள் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டில் இதுவரை மொத்தம் 8 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காட்டு யானைகள் தாக்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 7 ஆக குறைந்துள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் யானைகள் தாக்குதல் மற்றும் மரணங்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாக வனத்துறை கூறுகிறது.
காட்டு யானைகள் மற்றும் மனிதர்களின் உயிரிழப்புகள் இரண்டு மடங்கு குறைந்துள்ளதாகக் கூறும் வனத்துறை, இது தங்களுக்கும், வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
இது குறித்து பேசிய கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், "யானைகள் மற்றும் மனிதர்களின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இதற்கு வனப்பகுதியில் நீர்நிலைகளை உருவாக்குதல், உணவு தரும் தாவரங்களை நடவு செய்தல், கூடுதல் ரோந்து பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் முக்கியக் காரணம். இந்தாண்டு சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து வாங்கப்பட்ட 4 கூடுதல் ரோந்து வாகனங்கள் ரோந்து செல்ல பயன்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க |
இதேபோல மின்வேலிகள் மற்றும் நாட்டு வெடிகள் காரணமாக காட்டு யானைகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறையினர் கிராமப்பகுதிகளில் ரோந்து சென்று ஆய்வுகளை மேற்கொண்டு, ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்கின்றனர். அதேபோல, கடந்த 3 வருடங்களில் 55 தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இதனுடன் மொத்தமாக கோவை வனக்கோட்டத்தில் உள்ள 7 சரகங்களில் 120 தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இதில் தொடர்ச்சியாக நீர் நிரப்பப்பட்டு வருகிறது," என்று கூறினார்.
மேலும், "வனப்பகுதியை ஒட்டி யானைகளை கவரும் பயிர்கள் பயிரிடப்படுவது தான் அவை வெளியேவர முக்கிய காரணமாக இருக்கிறது. அதனைத் தடுக்க தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதால் யானைகள் காட்டை விட்டு வெளியே வருவது தடுக்கப்படுகிறது.
இது தவிர தொண்டாமுத்தூர் பகுதியில் 7 கோடி ரூபாய் செலவில் வயர் ரோபிங்க் செய்ய பணிகள் நடைபெற்று வருவதால் தொண்டாமுத்துரை சுற்றி 10 கி.மீ தொலைவிற்கு யானைகள் வெளிவருவது தடுக்கப்படும். அதனால் பயிர் சேதங்கள் முற்றிலும் குறைய அதிக வாய்ப்பு உள்ளது," என்றார் ஜெயராஜ்.
கடந்த வருடங்களை காட்டிலும் இந்த ஆண்டு யானைகளின் உயிரிழப்பு குறைந்துள்ளதால் சூழலியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், வனத்துறை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதால், வரும்காலங்களில் இது முற்றிலுமாகக் குறையும் என நம்பிக்கை தெரிவித்தார்.