நீலகிரி: கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் வனப்பகுதியிலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி, காட்டு யானைகள் குன்னூர் மலைப்பாதைக்கு படையெடுத்து வருகின்றன. இந்த நிலையில், கே.என்.ஆர். மரப்பாலம் பகுதியில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள், நேற்று (மார்ச் 4) இரவு முதல், குன்னூர் அருகே உள்ள ரண்ணிமேடு ரயில் நிலையத்தில் முகாமிட்டு, அப்பகுதியில் உள்ள செடி, கொடிகளை உணவாக உட்கொண்டு வருகின்றன.
இங்கு முகாமிட்டுள்ள காட்டு யானைகள், நகர்ப் பகுதிக்கு வராதவாறு, குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர் திலீப் ராம்குமார், வனக்காவலர் ஏசுராஜ் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் யானைகளைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து வனப்பகுதி வழியாக சென்ற யானைகள், மரப்பாலம் அருகே ரயில் பாதையில் முகாமிட்டன.
அதன் அருகிலேயே சாலை இருப்பதால், அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணிகளையும், செல்பி எடுப்பவர்களையும் யானைகள் விரட்ட ஆரம்பித்தன. அதன்பின், யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. யானைகளுடன் குட்டிகளும் இருப்பதால், யானைகள் ஆக்ரோஷத்துடன் உலா வருகின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என்றும், காட்டு யானைகளைக் கண்டவுடன் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், யானைகள் அருகே சென்று வீடியோ மற்றும் போட்டோ எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல், குன்னூர் ரயில் பாதையில் முகாமிட்டுள்ள 11 காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நீலகிரி, சத்தியமங்கலம் வனச் சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்..