ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்று டி.என்.பாளையம் வனச்சரகம். இந்த பகுதியில் அவ்வப்போது உணவிற்காகவும், தண்ணீருக்காகவும் யானை, சிறுத்தை, புலி, மான், காட்டெருமை போன்ற வனவிலங்குகள் சாலை வழியாக அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், இன்று வனத்திலிருந்து ஒற்றை காட்டு யானை கரட்டடிபாளையம் வழியாக மூல வாய்க்கால் பகுதியில் இருக்கும் குமரன் கரடு என்ற பகுதியின் விவசாயத் தோட்டத்தை கடந்து ஊருக்குள் வந்துள்ளது. அதனைப் பார்த்த அப்பகுதியினரான ஈஸ்வரி என்பவரும், அவரது கணவரும் கூச்சலிட்டனர்.
இதனைத் தொடர்ந்து யானை, உடனடியாக மலை மீது உள்ள முருகன் கோயிலுக்குச் சென்றுள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் கோயில் முன்பு திரண்டு யானையை பார்த்தபடி நின்றதால், மலை மீது இருந்த யானை கீழே இறங்காமல் போக்கு காட்டியது.
பின் தகவல் அறிந்து வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர், கடத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் யானையை தீவிரமாக கண்காணித்து விரட்ட முற்பட்டனர். அப்போது, திடீரென யானை வனத்துறையினரை துரத்தி வரத் தொடங்கியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், பாதுகாப்பான இடத்திற்குச் சென்ற யானையைக் கண்காணித்தனர். பின் அங்கிருந்து வெளியேறிய யானை கோபிசெட்டிபாளையம் அருகே இருக்கும் குமரன் கரடு விநாயகர் கோயிலை அடைந்தது. பினனர், அங்கிருந்து வெளியேறி வாய்க்காலில் குளித்துவிட்டு அருகில் உள்ள வாழைத் தோட்டத்தில் தஞ்சம் அடைந்தது.
மீண்டும் சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து கோபி - சத்தியமங்கலம் சாலை வழியாக அருகிலுள்ள தடப்பள்ளி வாய்க்காலுக்குள் சென்றது. வாய்க்காலில் தேங்கி இருந்த நீரில் உற்சாகமாக குளியலிட்ட யானை, பவானி ஆறு வழியாக காட்டுக்குள் அனுப்பப்பட்டது. சுமார் 10 மணி நேரப் போராட்டத்துக்கு பின் யானை காட்டுக்குள் அனுப்பப்பட்டதால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதையும் படிங்க: நான் வந்துட்டேன்.. வால்பாறை சாலையில் ஒய்யார நடைபோடும் சுள்ளி கொம்பன் யானை! -