ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியைச் சுற்றி உள்ள சாலைகளில் காட்டு யானைகள் சாலைகளில் நடமாடும் காட்சிகளை அவ்வப்போது பார்க்க முடிகிறது. இந்த வனப்பகுதி வழியாகத் தமிழக - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இங்குள்ள தாளவாடி மலைப் கிராமப் பகுதியில் விளையும் கரும்புகள் வெட்டி லாரிகளில் ஏற்றி எடுத்துச் செல்லும் பணியானது கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. மேலும் இந்த கரும்புகளை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சர்க்கரை ஆலைகளுக்கும், வெல்லம் மற்றும் கரும்பு சர்க்கரை தயாரிக்கும் ஆலைகளுக்கும், கரும்புச் சாறு விற்பனை செய்யும் கடைகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
அவ்வாறு கொண்டு செல்லும்போது வாசனை அறிந்து வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் வெளியேறி தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை வழிமறித்து கரும்பு துண்டுகளைப் பறித்துத் தின்பது போன்ற சம்பவம் நடந்து வருகிறது.
இதையும் படிங்க: பருவம் தவறிய மழையால் சேதமான பயிர்கள்.. மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை!
இந்நிலையில் இன்று (ஜன.20) அதிகாலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக காரப்பள்ளம் வன சோதனை சாவடி அருகே தார்ப்பாய் போர்த்தியவாறு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்றை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை லாரியில் கரும்பு உள்ளதா? எனத் தும்பிக்கையால் தேடிப் பார்த்தது. ஆனால், யானையால் கரும்பைக் கண்டறியமுடியாத காரணத்தால் லாரியை கடந்து சென்று சாலையில் வந்து கொண்டிருந்த மற்ற வாகனங்களைத் தனது தும்பிக்கையால் மறைத்து கரும்பு உள்ளதா? எனத் தேடியது
இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர். மேலும் சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானை, மெதுவாக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடர்ந்து, வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. இது குறித்து வனத்துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் வாகன ஓட்டிகளிடம் சாலையில் யானை நடமாட்டம் இருந்தால் வாகனங்களின் காற்று ஒலிப்பான்களை உபயோகப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினர்.