தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருத்துவக்குடி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என ஈராசிரியர் பள்ளியாக 45 குழந்தைகளுடன் தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த 1990ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் கோ.சி.மணி அமைச்சராக இருந்த போது கட்டப்பட்ட இப்பள்ளி கட்டிடங்கள், வலுவிழந்து விட்டதாகக் கூறி கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மாணவர்கள் கல்வி பயில தேவையான தற்காலிக கட்டிடம் உள்ளிட்டவவை திட்டமிடப்படாமல், முழுமையாக இடித்து அகற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த ஆறு மாதங்களாக புதிய கட்டிடம் கட்ட எந்தவித முன்னேற்பாடுகளும் தொடங்கப்படாத நிலையில், 45 குழந்தைகளுடன் இரு ஆசிரியர்களும் வேறு வழியின்றி, பள்ளிக்கு அருகேயுள்ள திரௌபதியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள தகர செட்டுகளில் தற்காலிமாக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்துள்ளனர்.
ஆனால், தற்போது அந்த இடமும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய நெல் மூட்டைகள் அடுக்கி வைக்க தேவைப்பட்டதால், குழந்தைகளும், ஆசிரியர்களும் சுவற்றில் அடித்த பந்தைப் போல மீண்டும் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்ட இடத்திற்கே வந்து, அங்குள்ள மரத்தடியில் பள்ளியைச் செயல்படுத்தி வந்தனர்.
இது குறித்து திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், அரசின் தலைமை கொறடாவுமான கோவி செழியன், தஞ்சை மாவட்ட ஆட்சியர், மயிலாடுதுறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் மற்றும் ராஜ்யசபா உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் ஆகியோரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மனு அளித்து முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
மேலும், அரசால் இடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் இதுவரை தொடங்காமல் இருப்பதையும், தற்காலிகமாக மாற்று இடம் ஒதுக்காமல் காலம் தாழ்த்துவதையும் கண்டித்து, 45 குழந்தைகளின் பெற்றோரும், தங்கள் குழந்தைகளை பள்ளி அனுப்பாமல், போராட்டத்தை முன்னெடுக்கும் முயற்சிகளைச் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், மரத்தடியில் கல்வி கற்கும் இக்குழந்தைகள் பாதுகாப்பாக கல்வி கற்க, தற்காலிக ஏற்பாடாக பள்ளி வளாகத்திற்கு அருகேயுள்ள தனியார் கட்டிடத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகையில் பயில, சம்மந்தப்பட்ட உரிமையாளரிடம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் அனுமதி பெற்றுள்ளார். அதன்படி, கல்வித்துறை அலுவலர்களின் அனுமதியோடு, பள்ளி தற்காலிகமாக அங்கு இயங்க நடவடிக்கையானது எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தர மனமில்லாத மு.க.ஸ்டாலின்? - வன்னியர் சங்கம் குற்றச்சாட்டு