சென்னை: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மையமாக உருவெடுத்ததால் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (டிச.02) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் நிவாரண நிதி கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
அதில், "ஃபெஞ்சல் புயல், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தபோது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொட்டதால், சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன.
#CycloneFengal has wreaked unprecedented havoc across 14 districts of Tamil Nadu, affecting 1.5 crore people, inundating 2.11 lakh hectares of farmland, and damaging critical infrastructure.
— M.K.Stalin (@mkstalin) December 2, 2024
Given the magnitude of destruction, I urge Hon'ble @PMOIndia Thiru. @NarendraModi to… pic.twitter.com/9KUulScZVY
மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் கனமழை மற்றும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி மக்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தவிர்த்து, இந்த பேரழிவின் காரணமாக, 12 மனித உயிரிழப்புகளும், 2,416 குடிசைகள், 721 வீடுகள் மற்றும் 963 கால்நடைகள் இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு, 2,11,139 ஹெக்டேர் பரப்பளவிற்கு விவசாய மற்றும் தோட்டக்கலை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதையும் படிங்க: "மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்து மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவோம்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
மேலும், 9,576 கி.மீ சாலைகள், 1,847 சிறுபாலங்கள் மற்றும் 417 குளங்கள் சேதமடைந்துள்ளது. அத்தோடு, 1,649 கி.மீ அளவிற்கு மின் கடத்திகள்; 23,664 மின்கம்பங்கள்; 997 மின்மாற்றிகள்; 1,650 பஞ்சாயத்து கட்டிடங்கள்; 4,269 அங்கன்வாடி மையங்கள்; 205 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 5,936 பள்ளிக் கட்டடங்கள்; 381 சமுதாயக் கூடங்கள் மற்றும் 623 குடிநீர் வழங்கல் பணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்த சேதங்கள் குறித்து தமிழ்நாடு அரசு முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கொண்டதில், தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு அவசர நிதி உதவி தேவைப்படுகிறது. பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியினை உடனடியாக விடுவிக்குமாறு இந்தியப் பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தமிழ்நாட்டில் இந்தப் புயல் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்தியக் குழுவை விரைவில் அனுப்புமாறும், அந்த மத்திய குழுவினரின் ஆய்வின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு விவசாயம் மற்றும் வாழ்வாதாரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மோசமான தாக்கத்தை எதிர்கொள்ள, தேவைப்படும் கூடுதல் நிதியினை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.