கோயம்புத்தூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் தொகுதியில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலையின் வேட்பு மனு முறைப்படி தாக்கல் செய்யவில்லை எனவும், அதனை நிராகரிக்க வேண்டும் எனவும் கூறி அதிமுக, நாம் தமிழர் இதர கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர்.
பின்னர், அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருப்பதாகச் சர்ச்சை ஒன்று எழுந்தது. அன்றைய தினமே கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடி-யிடம் அதிமுக வழக்கறிஞர்கள், நாம் தமிழர் மற்றும் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, அன்றைக்கே மாவட்ட நிர்வாகம் புதிய வேட்பு மனுவைப் பதிவேற்றம் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர். மேலும், இது குறித்து நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி, இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழக தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமாருக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. இது குறித்து ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி கூறுகையில், “வேட்புமனு பரிசீலனையின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் இது குறித்து புகார் மனு அனுப்பினோம்.
இது தொடர்பாக, நடவடிக்கைகள் எடுக்கக்கோரி தமிழக தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலரும் ஒருவரே தான். இப்படியிருக்கையில் எப்படி அவருக்கு அவரே நடவடிக்கை எடுப்பார்? என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் இது குறித்து முழு விவரங்கள் அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.
கண்டிப்பாக நீதிமன்றம் வாயிலாகத் தீர்வு வாங்கி தருவோம். அண்ணாமலை Form 26ல் விதிமுறைகளை மீறியுள்ளார். 52 இடங்களை அவர் குறிப்பிடாமல் Court Fee பத்திரத்தில் அளித்துள்ளார். இருப்பினும் பாஜக அரசிற்கும், அண்ணாமலைக்கும் சாதகமாகவே கோயம்புத்தூர் தேர்தல் அலுவலர் செயல்பட்டு வருகிறார். நீதிமன்றம் மூலம் இதற்கு ஒரு தீர்வு கண்டே தீருவோம். மேலும், அவர் வேட்பாளர் இல்லை என்ற அறிவிப்பையும் வாங்கி தருவேன்” என்றார்.
இதையும் படிங்க: சிலிண்டரை இடுப்பில் கட்டிக்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தொண்டர்! - Lok Sabha Election 2024