சென்னை: தமிழகத்தில், 18-வது சரணாலயமாக 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' என்னும் புதிய சரணாலயம் உருவாக உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வனத்துறை அளித்த தகவலில், “நீலகிரி உயிர்கோள காப்பகத்தை தென்காவிரி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களில் உள்ள 80 ஆயிரத்து 567 ஹெக்டேர் வனப்பரப்பில் 'தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்' என்னும் புதிய சரணாலயத்தை தமிழக அரசு உருவாக்க உள்ளது. இது மாநிலத்தின் 18-வது வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
பன்னாட்டுப் பறவைகள் மையம்: மத்திய ஆசியாவின் பறவைகள் வலசைப் பாதையில் தமிழ்நாடு அமைந்துள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் பெரும் எண்ணிக்கையில் பறவைகள் தமிழகத்திற்கு வருகை தருகின்றன. பறவைகளின் பாதுகாப்பைப் பேணவும், பறவையியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும், இயற்கையில் பறவைகளின் பங்கைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மரக்காணத்தில் ரூ.25 கோடியில் பன்னாட்டுப் பறவைகள் மையத்தை அரசு அமைக்கிறது.
பாதுகாப்பு பெற்ற வன உயிரின வாழ்விடப் பகுதி: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள காப்புக்காட்டுப் பகுதிகள், தொடர்ச்சியான மலைக் குன்றுகளால் இணைக்கப்பட்ட மலைப் பகுதியாகவும், கிழக்கு மலைத்தொடர், மேற்கு மலைத்தொடர் நீலகிரியில் இணைவதற்கு முன் உள்ள முக்கியமான மலைப் பகுதியாக உள்ளது.
ஆகவே, இந்த இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், அதனைத் தொடர்ந்து அமைந்துள்ள பிற பாதுகாக்கப்பட்ட வன உயிரின வாழ்விடங்களோடு இணைக்கப்படும்போது, இந்த நிலப்பரப்பு அனைத்தும் ஒரே மாதிரியான, சட்ட ரீதியான பாதுகாப்பு பெற்ற வன உயிரின வாழ்விடப் பகுதியாக அமையும்.
மாறுபட்ட மற்றும் செழுமையான பல்லுயிர்த் தன்மை: கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி வன உயிரின சரணாலய பகுதிகளை, நீலகிரி உயிர்கோள காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலத்தில் உள்ள பிலிகிரி-ரங்கசாமி கோவில் புலிகள் காப்பகம் போன்றவற்றை இணைத்து, ஒரு தொடர்ச்சியான வன உயிரின வாழ்விட நிலப்பரப்பாக ஏற்படுத்தும்.
இதன் மூலம் மாறுபட்ட மற்றும் செழுமையான பல்லுயிர்த் தன்மை பாதுகாக்கப்படுவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும். இதுமட்டுமல்லாது, இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், பல்வேறு தாவரங்கள் மற்றும் வனவிலங்குகள் நிறைந்த யானைகளின் முக்கிய வாழ்விடப் பகுதியாகும்.
பல்வேறு உயிரினங்களின் முக்கிய வாழ்விடப் பகுதி: இந்த நிலப்பரப்பு, நீலகிரியை அடுத்துள்ள கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவேரி வனப்பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய பிணைப்பாக உள்ளது. இது வேறுபட்ட வாழ்விடப் பகுதியாகவும், பல்வேறு உயிரினங்களின் முக்கிய வாழ்விடப் பகுதியாகவும் உள்ளது.
மேலும், இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், இந்த தொடர்ச்சியான மற்றும் மாறுபட்ட வன உயிரின வாழ்விட நிலப்பரப்பின் மையமாக உள்ளது. இப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை முறையே, மலை மாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்துடன் இணைக்கும் ஒரு முக்கியமான வழித்தடத்தை உருவாக்கி, புலிகளின் வளமான வாழ்விடப் பகுதியான நிலப்பரப்பாக அமைகிறது" என்று தெரிவித்துள்ளது.
இதியும் படிங்க: வடமாநிலங்களில் நிலவும் கடும் குளிர்.. சென்னையில் விமான சேவை கடும் பாதிப்பு!