மதுரை: மதுரையில் நடைபெறும் 'நம்ம ஸ்கூல், நம்ம ஊரு' பள்ளித் திட்ட மாநாட்டில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் 51 கோடியே 5 லட்சத்து 38 ஆயிரத்து 94 ரூபாய் மதிப்பிலான ஒப்புகைக் கடிதங்களை தொழில்துறையினர், கொடையாளர்கள், சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற 'நம்ம ஸ்கூல், நம்ம ஊரு' பள்ளித் திட்ட நிகழ்ச்சியில், மறைந்த தனது மகள் ஜனனி நினைவாக அரசுப் பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு ரூ.7.5 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை நன்கொடையாக வழங்கிய வங்கி ஊழியர் ஆயி பூரணம்மாளை பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்னாடை போர்த்தி பாராட்டி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
இதேப்போன்று தான் பயின்ற மாநகராட்சிப் பள்ளிக்கு ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கிய பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, மதுரை மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்த ரூபாய் 1.81 கோடி ரூபாய் நிதி அளித்த அப்பள வியாபாரியான ராஜேந்திரனையும் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நம்ம ஸ்கூல், நம்ம ஊரு' பள்ளி திட்டத்தை துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இந்த ஒரு வருடத்தில் இத்திட்டம் (Namma School Namma Ooru Palli - NSNOP) உங்கள் ஆதரவின் மூலம் பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
NSNOP தொடங்கப்பட்டதில் இருந்து ரூபாய் 200 கோடிக்கு மேல் திரட்டப்பட்டு உள்ளது. மதுரையில் 50 கோடிக்கு மேல் இன்று உறுதிமொழி எடுத்துள்ளோம். இந்தத் திட்டத்தை மாவட்டங்கள் முழுவதும் சிறு மாநாடுகளாகக் கொண்டு செல்வோம். அதிகளவாக முதல் இடத்தில் டிவிஎஸ் நிறுவனமும், இரண்டாவது இடத்தில் அசோக் லேலண்ட் நிறுவனமும், மூன்றாவதாக ஒரு தனி நபராக ஏழரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வழங்கி உள்ள பூரணம் அம்மாள் உள்ளனர்.
மகள் இல்லையே என்ற ஏக்கம் வேண்டாம். பூரணம் அம்மாளுக்கு மகனாக இந்த அன்பில் மகேஷ் எப்போதும் இருப்பேன் என்பதை நினைவுபடுத்தும் விதமாக இந்த விழா அமைந்துள்ளது. 38 மாவட்டங்களின் ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் பொது மேலாளர்கள் உள்பட அனைவரும் இணைந்து செயல்பட்டதன் மூலம் அனைத்தும் சாத்தியமானது.
CII போன்ற கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் பல தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஒன்று சேர்ந்துள்ளன. சொத்துக்கள் கட்டி உருவாக்கினால் மட்டும் போதாது, அவை நன்கு பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். சமூக அமைப்புகளின் ஆதரவுடன், முறையாக தொழில்கள் மற்றும் சமூக அமைப்புகளை இணைப்பதன் மூலம், நாம் ஒரு மிகப்பெரிய நிலையான தாக்கத்தை உருவாக்க முடியும்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம், எங்களின் 37ஆயிரத்து 558 பள்ளிகளிலும் 90%க்கும் அதிகமான பதிவு இருந்தது. இது சமூகங்களின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற முதல் மாநில அளவிலான முன்னாள் மாணவர் திட்டத்தை நாங்கள் டிசம்பரில் நடத்தினோம்.
நமது பள்ளிகளில் பழைய மாணவர்களின் ஈடுபாடு மாற்றத்திற்கு இன்றியமையாதது. அரசுப் பள்ளிகள் நம் நகரங்களில் அல்லது உலகில் எங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் உங்கள் கிராமத்துடன் உணர்ச்சிப்பூர்வமான இணைப்பாக, ஒளியாக இருக்க முடியும். நமது பள்ளிகள் நமது வளமான தமிழ் திராவிட கலாச்சாரத்துடன் அறிவார்ந்த மற்றும் உணர்வுபூர்வமான இணைப்பின் ஒளியாக இருக்க வேண்டும்.
நாம் ஒன்று சேர்ந்து இதையெல்லாம் சாத்தியமாக்க முடியும். இதை சாத்தியமாக்குவதற்கு வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் திறமை தேவை. இதை சாத்தியப்படுத்த NSNOP குழு அயராது உழைப்பதை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் பங்களிக்கும் ஒவ்வொரு ரூபாயும் பணம், பொருள், தன்னார்வ சேவைகள் அல்லது உதவித்தொகைகளின் ஸ்பான்சர்ஷிப் ஆகியவை வலுவான மற்றும் வெளிப்படையான தகவல் தொழில்நுட்ப அமைப்பு மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
இரண்டு வருடங்களாக நாங்கள் NSNOP போர்டல் மற்றும் NSNOP பெவிலியன் ஆகிய அமைப்பை உருவாக்கி, தொடர்ந்து பலப்படுத்தி வருகிறோம். டைனமிக் NSNOP போர்ட்டல் மற்றும் புதிய NSNOP பெவிலியன் ஆகியவை உங்கள் பங்களிப்பின் முன்னேற்றத்தை முறையாகக் கண்காணிக்க அனுமதிப்பது மட்டுமல்லாமல், உங்கள் பள்ளிக்குச் சென்று நீங்கள் உருவாக்கும் மதிப்பை பெருமையுடன் பார்க்கவும் உங்களை அனுமதிக்கும்.
மெய்நிகர் பெவிலியன் பழைய மாணவர்களை பல ஆண்டுகளாக ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் இணைக்க அனுமதிக்கும். உங்கள் ஒவ்வொரு ரூபாயும் எங்களுக்கு விலைமதிப்பற்றது. உங்களின் ஒவ்வொரு ரூபாயையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
இன்று NSNOP-க்கு உறுதியளித்த கார்ப்பரேட்டுகள் மற்றும் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அரசுப் பள்ளிகளுக்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக விருது பெற்றவர்களை நாங்கள் கொண்டாடுகிறோம். மேலும் அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.
இன்று எங்களுடன் இருப்பதற்கு நன்றி. NSNOP என்பது உங்கள் திட்டம். எங்கள் பள்ளிகள் உங்கள் பள்ளிகள். எங்கள் குழந்தைகளுக்கு உண்மையிலேயே தரமான கல்வியை வழங்குவதில் அரசு உங்களுடன் கூட்டு சேரும்" என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய திண்டுக்கல் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், சிறப்பாக செயல்பட்ட குழுக்களுக்கும், அதிக அளவு நிதி அளித்த முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: "செந்தில் பாலாஜியின் மனு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைப் போன்றது" - முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையீடு!