திருப்பூர்: மறைந்த முன்னாள் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் என்.எஸ்.பழனிசாமியின் 82வது பிறந்த நாளை முன்னிட்டு, மணிமண்டப திறப்பு விழா திருப்பூர் பல்லடம் வட்டம் நாதகவுண்டன்பாளையம் கிராமத்தில் நடைபெற்றது. இதனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “எந்த தொழில் வேண்டுமானாலும் செய்து விடலாம். ஆனால், விவசாயம் கடினமான தொழில். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இன்றி 60 ஆண்டுகளுக்கு மேலாக வறட்சியால் வாடிக்கொண்டிருந்தனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், ஜெயலலிதாவின் உறுதிமொழியை நான் முதலமைச்சரான பின்பு நிறைவேற்றினேன். மாநில நிதியில் ரூ.1,652 கோடி ஒதுக்கப்பட்டு, அனைத்து பணிகளும் துவங்கப்பட்டன. 2021க்குப் பின்பு வந்த திமுக அரசு எஞ்சிய பணிகளை 6 மாதத்தில் முடித்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதிமுக திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுவிட்டனர்.
திமுக அரசின் கவனத்துக்கு தொடர்ந்து கொண்டு வந்தோம். இன்றைக்கு வேறுவழியில்லாமல் திமுக அரசு இந்த திட்டத்தை துவங்கி உள்ளது. இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஸ்டாலின் அரசு தாமதப்படுத்தி உள்ளது. தற்போது திட்டத்தை அவர் செய்தது போல பேசியுள்ளார். ஆனால், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக அரசு.
மேட்டூர் அணை நிரம்பி, உபரி நீர் நிரம்பி காவிரி - குண்டாறு திட்டத்தை கொண்டு வந்தோம். நஞ்சை, புகழூர் உள்ளிட்ட 2 இடங்களில் தடுப்பணைகள் ரூ.450 கோடி மதிப்பில் கொண்டுவந்தோம். அதிமுக ஆட்சியில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாகமால் ஓடை, நதிகள் குறுக்கே தடுப்பணைகள் கட்டினோம். ஆனால், இவற்றை எல்லாம் திமுக கிடப்பில் போட்டது.
தமிழகத்திலேயே முதன்முதலில் வறட்சி நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக. புயலால், வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது பயிர் காப்பீடு தந்தோம். ரூ.9,300 கோடி விவசாயிகளுக்கு இழப்பீட்டை பெற்றுத் தந்தோம். தொடக்க வேளாண் வங்கியில் ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்கள். கேரளாவுக்கு நேரில் சென்று எனது தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் பரிசீலிக்க சிந்திப்பதாக சொன்னார். அப்போது 3 கட்ட பேச்சுவார்த்தைகளுடன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணக்கமான சூழ்நிலையுடன் அந்த திட்டத்தை நிறைவேற்ற முயன்றோம். அதற்கு பின்பு வந்த திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை. மீண்டும் வரும் ஆட்சியில் ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பாஜக அரசு பட்டாசு தொழிலுக்கும் வெடி வைத்துள்ளது.. எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு!