சென்னை: மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து 7வது நாளாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஆலோசனையில் ஈடுபட்டார். அதில் பொள்ளாச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
அதில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆலோசனையின்போது, நீலகிரியில் திமுக கூட்டணி வலுவாக இருந்ததாகவும், அதிமுக கூட்டணி வலுவாக இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் நிர்வாகிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், வாக்காளர்கள் வேட்பாளர் முகம் பார்த்துதான் வாக்களித்துள்ளதாகவும், அதனால்தான் நீலகிரி தொகுதியில் அதிமுக தோல்வியடைந்து விட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாக சொல்லப்படுகிறது. அதேபோல், ஆ.ராசா மற்றும் எல்.முருகன் ஆகியோர் நன்கு அறிந்த முகம் என்பதும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட காரணமாக இருந்ததாக நிர்வாகிகள் தெரிவித்ததாக தெரிகிறது.
அதேபோல், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்ததன் காரணமாக வருகின்ற தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், 2026 தேர்தலுக்கு அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும் என்றாலும், கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது என்றும், அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாகவும் அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்.. உச்ச நீதிமன்றத்தில் காரசார வாதம்!