சேலம்: சேலம் மாநகர் தாதகாப்பட்டி மைதானத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று (பிப்.25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி; அது கட்சி அல்ல. கட்சிக்கு உண்டான தகுதி அதிமுகவுக்குத் தான் உள்ளன. நீட் தேர்வு ரத்து (NEET Exam) செய்ய பல லட்சக்கணக்கான கையெழுத்து வாங்கிய அஞ்சல் அட்டைகள் காற்றில் பறந்து குப்பைத் தொட்டிக்குப் போனது. இதுதான் நீட் தேர்வு ரத்து செய்யும் லட்சணம்.
திமுக பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கான பிரச்னைகளைப் பற்றி கவலைப்படாமல் குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார். அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சேலத்திற்கு வந்து பாருங்கள். 2011-க்கும் இப்போதைக்கும் வித்தியாசத்தைப் பாருங்கள்.
10 ஆண்டுகால அதிமுக ஆட்சி பொற்காலம் என பொதுமக்கள் பேசுகின்றனர். ஏழைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்காமல் செய்யும் வகையில் அம்மா கிளினிக்-ஐ (AMMA CLINIC) மூடியதுதான் திராவிட மாடல் திமுக அரசின் சாதனை. சேலம் திமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் திட்டத்தினை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்ததுதான் திமுகவின் சாதனை.
திமுக 4 முறை அறிவித்த பட்ஜெட்டில், 3 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. கடன் வாங்குவதில் இந்தியாவின் சூப்பர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அந்த கடன் சுமை, தமிழக மக்கள் மீதுதான் விழும். ஊழல் செய்வதில் நம்பர் 1 மாநிலம் தமிழகமாக உள்ளது.
திமுக அரசு வந்தப் பின்னர், காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாது அணை (Mekedatu dam) கட்ட பொருள் கொண்டு வந்தபோது அதனைத் தமிழக அதிகாரிகள் நிராகரிக்கவில்லை. வாக்கெடுப்பு நடத்தி கர்நாடக அரசு மேகதாது அணைக்கு ஆதரவைப் பெற்றுவிட்டது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்' என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், 'திமுகவின் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி பொதுமக்கள் வாக்களித்தனர். 500-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. 99 சதவீதம் நிறைவேற்றியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பச்சைப்பொய் சொல்கிறார். சேலம் மாவட்டத்தில் ஜவுளித்தொழில் நசிந்து விட்டது. விசைத்தறி, கைத்தறி தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.
தமிழகம் அதிக கடன் வாங்கி வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. 8 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டனர். திமுக ஆட்சி முடிவதற்குள் 10 லட்சம் கோடி ரூபாயாக கடன் உயர்ந்துவிடும். இதையும் மக்கள்தான் ஏற்க வேண்டும். கடன் சுமை மக்களின் தலையில் விழும். பல வகையில் வருவாய் அதிகரித்தும் கடன் அதிகமாக நிர்வாக திறமையில்லாததுதான் காரணம்.
திமுக மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வருவது கொள்ளையடிப்பதற்காகத்தான். மீண்டும் திமுகவை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்தால் ஊழல்தான் செய்வார்கள்"என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தரவில்லை.. வின்பாஸ்ட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிய பின் ஸ்டாலின் பேச்சு!