சென்னை: சென்னையில் இன்று காலை முதல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை வேப்பேரி, நுங்கம்பாக்கம், தி,நகர் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, சென்னையில் பின்னி மில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு முன்னாள் எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து சோதனைகள் மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், இரண்டு கட்டுமான நிறுவனங்களில் சோதனை நடத்திய நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்தனர்.
இதன் அடிப்படையில், தி.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் லேண்ட்மார்க் ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் உதயகுமார் இல்லத்திலும், அதேபோல் நுங்கம்பாக்கம் கோதாரி தெருவில் உள்ள விஜயசாந்தி அபார்ட்மெண்டில் போபாலியா பில்டர்ஸ் உரிமையாளர் சுனில் என்பவர் வீட்டிலும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 கார்களில் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மணல் குவாரிகளில் நடத்திய சோதனையில் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை