சென்னை: டெல்லியில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் திமுக நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை கடந்த மார்ச் மாதம் டெல்லி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கில் அவருடன் சேர்ந்து மொத்தம் 5 பேரை கைது செய்து, விசாரணைக்குப் பின் அவர்களை திகார் சிறையில் அடைத்தனர். இதனிடையே, இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு ஒன்றை பதிவு செய்து ஜாபர் சாதிக்கை மீண்டும் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது மனைவி, சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அந்த வகையில், இதில் நடிகரும், இயக்குநருமான அமீரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை அவரை கைது செய்துள்ளதால் அவர் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், ஜாபர் சாதிக் டெல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் மட்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது.
அதனை அடுத்து, ஜாபர் சாதிக்கை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பேகம் என்பவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் ஆறு மணி நேரமாக விசாரணை நடந்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து தற்போது விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்கு விவரங்கள் குறித்து அவரது மனைவி அமீனா பேகத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், 3 நாட்கள் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்துள்ளதால், அவரையும், அவரது மனைவியையும் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விடாமல் விரட்டிய சிபிசிஐடி.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதான கதையும், வழக்கு பின்னணியும்..!