சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் அடிப்படையில் கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறையின் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இன்று 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
இதில் சென்னை தி.நகர், திருவான்மியூர், கொளத்தூர், முகப்பேர், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அரசு திட்டங்களின் ஒப்பந்ததாரர்கள், அரசுக்கு மென்பொருள்களை விநியோகம் செய்யும் நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டும் ஒப்பந்த தொழில் செய்து வரும் சுரேஷ் என்பவர்க்கு சொந்தமான சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அடுத்த பல்லாவரத்தில் இயங்கி வரும் எஸ்டி கொரியரின் தலைமை அலுவலகத்தில் நான்குக்கு மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த எஸ்டி கொரியர் நிறுவனத்தை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நடத்தி வருவதாக முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரத்தில் மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராகவும் நவாஸ் கனி அறிவிக்கபட்டுள்ள நிலையில் பல்லாவரம் எஸ்டி கூரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் சென்னை பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் பகுதியில் உள்ள மாஸ் ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவரான ரியாஸ் என்பவர் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் டுமில் குப்பம் பகுதியில் உள்ள ட்ரேடர் சொல்யூஷன் என்ற மென்பொருள் சப்ளை செய்யக்கூடிய நிறுவனத்திலும் சோதனை மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வந்த தகவல் அடிப்படையிலே 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்குச் சென்றுள்ள ஒரு சில நிறுவனங்கள் மூடி உள்ளதால் அங்கேயே காத்திருந்து அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களை வரவைத்து சோதனைகளில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனைக்குப் பிறகு முழுமையான விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம்.. ஈஸியாக நீங்களே அப்டேட் செய்வது எப்படி?