டெல்லி: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தார், திண்டுக்கலைச் சேர்ந்த சூர்யமூர்த்தி. அவர் அளித்த அந்த மனுவில், “அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்திற்கு 2017 முதல் 2022ஆம் ஆண்டும் வரை புகார்கள் அளித்துள்ளேன்.
உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரை, அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இவர் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது.
அதன் காரணமாக, சூர்யமூர்த்தி தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு வரும் 25ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில்தான், சூர்யமூர்த்தி அளித்த மனு மீது பதிலளிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோடீஸ் அனுப்பி உள்ளது. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இணைந்துள்ளனர். ஒரு பக்கம் ஓபிஎஸ் தங்கள் அணி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எனக் கூறி வருகிறார். மறுபக்கம், நாடாளுமன்றத் தேர்தல் தேதியின் அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இப்படியான சூழலில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது அரசியல் மேடையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ரூ.1 கோடி நிதி வழங்கிய விஜய்.. தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி!