சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 23வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இளங்கலை முதுகலை ஆய்வு படிப்பு உள்ளிட்டவற்றில் பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சித்துறைகளில் நடைபெற்று வரும் ஆராய்ச்சிப் பணிகளை, பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு செய்தார். சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்தார். இதனை அடுத்து, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை மாணவ, மாணவியர் உருவாக்கியுள்ள கலைத்திறன் மிக்க ஆடைகளை பார்வையிட்ட ஆளுநர், நெசவாளர்களுக்கு உதவிடும் வகையில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு ஆராய்ச்சியாளர்களை கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் பெரியார் பல்கலைக்கழக தொழில் அடைவு மையத்தினை பார்வையிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ-மாணவியர் கல்வி பயிலும் போதே ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கிட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மாணவர்களின் முயற்சிகள் பற்றியும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் ஆராய்ச்சி துறை பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள சேலம் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
இந்த நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர், மத்திய அரசின் விக்சித் பாரத் திட்டத்தை பரப்ப முயல்வதாக கூறி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்பு திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் தமிழக ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நினைப்பதாகவும், விக்சித் பாரத் ஆராய்ச்சி மாணவர்களுடன் கலந்துரையாடல் என சனாதன மத்திய அரசின் திட்டங்களை கல்வி நிலையங்களில் பரப்ப முயல்வதை நிறுத்த வேண்டும் எனவும், பல்கலைக்கழக வளாகங்களில் சனாதன சிந்தனைகளை வளர்க்கத் துடிப்பதாகவும் கூறி கருப்பு கொடி ஏந்தி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், அனுமதி மீறி கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக கொளத்தூர் மணி உட்பட 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த கருப்பு கொடி போராட்டத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்