தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை பகுதியில் இணை சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை முதல் அதிகளவில் பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில், தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சுந்தர் ராஜன் தலைமையிலான இரண்டு ஆய்வாளர்கள் உட்பட 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும், நேற்று மாலை 4 மணியளவில் துவங்கிய சோதனையானது இரவு 10 மணிக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்றது.
கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.87,500 லஞ்ச ஒழிப்புப் போலீசார் பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி, நேற்று மட்டும் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகளவு பத்திரப்பதிவு நடந்ததால், சந்தேகத்தின் பேரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.
பின்னர் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், இணை சார்பதிவாளர் பரமேஸ்வரி மற்றும் அலுவலக உதவியாளர்கள் 2 நபர்கள் உட்பட 4 நபர்கள் மீதும் கணக்கில் வராத பணம் வைத்திருந்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு (Unaccounted money) செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசி சொக்கம்பட்டி அருகே யானை மிதித்து முதியவர் பலி!