நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையில் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கீழ் பாரத் நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதில், கார் சேதம் அடைந்துள்ளது. மேல் பாரத் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட மூதாட்டி ஒருவர் காயமடைந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மண் சரிவில் குன்னூர் - கோத்தகிரி சாலை, குன்னூர் ஐயப்பன் கோயில் சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த வாடகை கார் மீது மரம் விழுந்து ஜாகிர் உசேன் (43) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவு முழுவதும் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சட்டமன்றத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை..?
மண் சரிவினால் பாதிப்படைந்த குன்னூர் - மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் பாறைகள் விழுந்துள்ளதால் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணாபுரம் பகுதி சாலையில் பள்ளம் ஏற்பட்டது. குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பர்லியார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மழை நீர் மற்றும் மண் புகுந்து பள்ளி முழுவதும் சேதமடைந்துள்ளது.
மேலும் கழிவுநீர் செல்லும் கால்வாயில் பாறைகள் புகுந்துள்ளது. இதேபோல் கடந்த மாதம் எட்டாம் தேதி இதே பள்ளியில் மழை நீர் மற்றும் மண் புகுந்தது குறிப்பிடத்தக்கது. இரவு நேரம் என்பதாலும் பள்ளி விடுமுறை என்பதாலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக பள்ளியை சீரமைத்து கொடுக்க அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அபாயகரமாக உள்ள மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் குன்னூர் வருவாய்த்துறை அதிகாரிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்