சேலம்: இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி நடந்து முடிந்தது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்னிக்கை நேற்று (ஜூன் 4) நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற திமுக உள்ளிட்ட கட்சிகள் 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது.
அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது. தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் 27 தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து இரண்டாம் இடத்தை பிடித்தது. மேலும், ஏழு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்த தேர்தல் முடிவு அதிமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த கால தேர்தல்களைக் காட்டிலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்று அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
இந்நிலையில், 'மீண்டும் அதிமுகவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல சசிகலா தலைமை ஏற்க வேண்டும்' என்று அதிமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்து சசிகலா ஆதரவாளர்கள் சேலத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், அதில் 'சிந்திப்போம் செயல்படுவோம், சின்னம்மா தலைமை ஏற்போம்' எனவும் சசிகலா ஆதரவாளர்களால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு வழிபாடு! - Edappadi Palaniswami