கோயம்புத்தூர்: கோவை மாவட்டப் பகுதியில் பெய்து வரும் தொடர் கன மழையால், வால்பாறை 16வது கொண்டை ஊசி வளைவில் பாறைகள் உருண்டு இன்று (மே 18) போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார், வால்பாறை, சின்னக்கல்லார், சோலையார், கேரளா எல்லை, மலக்குப்பாறை போன்ற பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலைப்பாதைகளில் வரும்போது சாலை ஓரம் வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாகனங்களில் கவனமாக வர வேண்டும் எனவும் வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த சூழலில், இன்று வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், 16வது கொண்டை ஊசி வளைவில், திடீரென பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் வனத்துறையினர் சாலையில் கிடக்கும் பாறையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாறை உருண்டு கீழே வரும் நேரத்தில் வாகனம் ஏதும் அவ்வழியாக செல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதே போல் தொடர் கனமழை காரணமாக, ஆழியார் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. மேலும், வால்பாறை பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், கவி அருவிக்கு கணிசமான நீர் வந்து கொண்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழை காரணமாக, காட்டாற்று வெள்ளம் வரக்கூடும் என்பதால், வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதை அடுத்து, பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள கணபதி நகர் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. இதையடுத்து, மழையால் தேங்கிய நீரை வெளியேற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் அளவு தற்போது 22 சென்டிமீட்டராக பதிவாகியுள்ளது.