தூத்துக்குடி: திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை மற்றும் 2024 பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், திராவிட பேச்சாளர் நாஞ்சில் சம்பத், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதா ஜீவனுக்கு, சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் நினைவு வெள்ளி வாளைப் பரிசாக வழங்கினார். அதேபோன்று கட்சித் தொண்டர்கள் ஆளுயர மாலைகளை இருவருக்கும் அணிவித்தனர். திமுக, மற்றும் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி என கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அப்போது கனிமொழி எம்பி மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒருவர் மேடையின் முன் ஒலிபெருக்கிக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் ஏறி தொங்கியபடி, அலப்பறை செய்தார். அப்போது கனிமொழி எம்பி, அவரைக் 'கீழே இறங்குங்கள்.. கீழே இறங்குங்கள்' என வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து கூட்டத்திலிருந்த கட்சி நிர்வாகிகள், காவல்துறையினர் அவரை பத்திரமாக மீட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் கம்பத்தில் ஏறியவர் யார்? என விசாரித்த போது, அவர் பிள்ளையார் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பது தெரியவந்தது. இதனால், பொதுக்கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கும்பகோணம் இயற்கை உணவுத் திருவிழா; அரிய மரபு காய்கறி விதைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்ற மக்கள்