திருவாரூர்: மன்னார்குடியில், திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், நேற்று (ஏப்.29) இரவு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த இருக்கைகளைத் தூக்கி வீசி, உடைத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் சப்தம் போட்டபடி அங்கும் இங்கும் தாவி குதித்தவாறு ஓடிய அவரைக் கண்ட மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட அனைவரும் ஒதுங்கி உள்ளனர். தற்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து மன்னார்குடி அரசு மருத்துவமனை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தற்போது முதற்கட்ட விசாரணையில், மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட நபர் மன்னார்குடி வெள்ளக்கார தெருவைச் சேர்ந்த வடிவேலு என்பதும், அவர் போதையில் இது போன்று ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், மருத்துவமனை போன்ற இடங்களீல் இதுபோன்று வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், மருத்துவமனையிலிருந்த நோயாளிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, போதையில் மருத்துவமனையில் புகுந்து ரகளை செய்த வடிவேலு என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக, மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் மருத்துவம் பார்க்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது போதையில் ஒருவர் மருத்துவமனைக்குள் நுழைந்து ரகளையில் ஈடுபடும் வீடியோ வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும், பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலை அளிக்கின்றது. போதைபொருள் புழக்கம் குறித்த எனது தொடர் எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இந்த விடியா திமுக அரசு செயலற்று இருந்ததன் விளைவே, தற்போது தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டால் அதிகரிக்கும் குற்றச் செயல்களும் பொதுமக்களுக்கான இடையூறுகளும்.
கடந்த சில நாட்களாக போதைப்பொருட்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த செய்திகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்துமாறு விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.