சென்னை: கடந்த மாதம் பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் 2000 கோடி மதிப்பிலான போதைப் பொருளை மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில், இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூலையாகச் செயல்பட்டு வந்த தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவரைக் கடந்த 15 நாட்களாகத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
மேலும், ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அவர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்கள்,துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சொகுசு விடுதியில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக்கை மத்தியப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பொறிவைத்து நேற்று(சனிக்கிழமை) கைது செய்தனர். இதையடுத்து ஜாபர் சாதிக்கை டெல்லி அழைத்து வந்த அதிகாரிகள், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் மொய்தீன், சலீம் இருவரையும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்க ஆஜர்படுத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஜாபர் சாதிக்கை 15 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரினர்.
ஆனால், அவரை ஏழு நாட்கள் மட்டுமே வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூன்று பேருடன் ஜாபர் சாதிக்கையும் இணைத்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பல்லாயிரம் கோடிகள் சட்டவிரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்து இருப்பதாகக் கூறப்படுவதால், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஜாபர் சாதிக்யிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக ஜாபர் சாதி தொடர்பான விவரங்களை அளிக்கத் தமிழ்நாடு காவல்துறை தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை டெல்லியிலிருந்து தமிழகம் அழைத்து வந்து, விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: "எதிர்பார்த்த அளவில் ஒன்றும் இல்லை" இன்ஸ்பெக்டரின் வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் விரக்தி