தஞ்சாவூர்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 101 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.கல்யாணசுந்தரம் தலைமையில், அமைப்புச்சார ஓட்டுநர்கள் சங்க செயலாளர் லட்சுமணன் முன்னிலையில் கும்பகோணம் திமுக அலுவலத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி கலந்து கொண்டு கிருத்திகா என்ற மகளிர் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 101 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகர செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சு.ப. தமிழழகன் உள்ளிட்ட தஞ்சை வடக்கு மாவட்ட மற்றும் கும்பகோணம் மாநகர கட்சி நிர்வாகிகளும், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உலகம் சுற்றும் வாலிபன்: நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “தற்போது 40க்கு 40 என நூறு சதவீதம் வென்று நாடாளுமன்றத்தில் திமுக வலுவான எதிர்கட்சியாக அமர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கே வராமலும், அங்கு பேசாமலும், உலகம் சுற்றும் வாலிபனாக செயல்பட்டார்.
அவர் 15 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும் அப்படி தான். அவர் சட்டமன்றத்திற்கே செல்ல மாட்டார். சட்டமன்றத்தில் எதுவும் பேசியதில்லை. ஆனால் இப்போது நிலைமை வேறு, வலுவான எதிர்க்கட்சியாக திமுக அமர்ந்துள்ளதால், என்னென்ன மாற்றங்கள் வர போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 மற்றும் நாடாளுமன்ற தேர்தல் 2024ல் செங்கல்லை வைத்துக் கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டதைப் போல, 2026ல் அதே செங்கல்லை வைத்துக் கொண்டு பிரச்சாரம் மேற்கொள்வாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “கடந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு கிடைத்த நன்மைகளுக்கு பிரதிபலனாக தான் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத வகையில் 40க்கு 40ஐ வெல்ல வைத்திருக்கிறார்கள்.
அதற்கு முழு முதற்காரணம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். அவர் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை. மக்களின் எதிர்பார்ப்பை இன்னும் 2 ஆண்டுகளில் நிச்சயம் தமிழக முதலமைச்சர் நிறைவேற்றித் தருவார். எனவே செய்த சாதனைகளை சொல்லி மக்களிடம் 2026 தேர்தலை சந்திப்போம்.
நீட் தேர்வு குளறுபடி தொடர்பான வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக கூற முடியாது. இருப்பினும், அதில் தவறுகளும், ஊழல்களும் நடந்துள்ளது உண்மை என அனைவருக்கும் தெரிந்துள்ளது. பல மாநிலங்கள் நீட் வேண்டாம் என்கிற நிலையில், உச்ச நீதிமன்றமும் அதே கண்ணோட்டத்தில் தான் உள்ளது. எனவே விரைவில் நீட் குறித்து நல்ல முடிவு கிடைக்கும்” என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
பேட்டியின்போது தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் எம்.பி., திமுக மாநகர செயலாளரும், துணை மேயருமான சு.ப. தமிழழகன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கூட்டணி இன்றி திமுக தனித்து நிற்க தயாரா? - செல்லூர் ராஜு சவால்! - Sellur K Raju