தஞ்சாவூர்: தஞ்சாவூரில் திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை மற்றும் 2024 பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர்,"விவசாயிகளுக்கு தொடர்ந்து எதிராக இருக்கக்கூடிய ஆட்சி மத்தியில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சி மட்டும்தான்.
தொன்மையும், தொடர்ச்சியும் இருக்கக்கூடிய ஒரே மொழி தமிழ், சமஸ்கிருதத்தில் தொன்மை இருக்கிறது, ஆனால் தமிழ் அளவிற்கான தொன்மையும், தொடர்ச்சியும் இல்லை. தமிழை பெருமையாகப் பேசுகிறோம் என்று சொல்லக்கூடிய மத்திய அரசாங்கம், தமிழை வளர்க்க ஒதுக்கப்படும் நிதியை விட, 22 மடங்கு அதிகமாக சமஸ்கிருதத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கக் கூடாது என்ற முடிவிலே இருக்கிறது, பாஜக. தமிழ்நாட்டிற்கு மட்டும் கிட்டத்தட்ட 300 முதல் 400 கோடி ரூபாய் பணம், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் தர வேண்டும். அந்த நிதி ஒதுக்கீடு வரவில்லை, நாடு முழுவதும் யாருக்கும் 100 நாள் வேலை கொடுக்க முடியவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “பிரதமர் பெயரில் இருக்கக்கூடிய வீடு கட்டும் திட்டத்தில் கால்வாசி பணம் மத்திய அரசு தருகிறது, முக்கால்வாசி பணம் தமிழ்நாடு அரசு கொடுக்கிறது. நியாயமாக யார் பெயரை வைக்க வேண்டும்? இது முதலமைச்சர் வீடு கட்டும் திட்டம், ஆனால் பிரதமர் பெயரை ஸ்டிக்கராக ஒட்டுகின்றனர்.
அதிமுகவுடன் முன்பு பாஜக கூட்டணியில் இருந்தது, இப்போதும் அந்த கூட்டணியில்தான் இருக்கிறது. அதிமுக எப்படி ஸ்டிக்கர் ஒட்டியதோ, அதேபோல ஸ்டிக்கர் ஒட்டக்கூடிய அரசுதான் மத்திய பாஜக அரசு. நம்முடைய உரிமைகளை பாஜகவிடம் காலடியில் வைத்து தொழுதுவிட்டு வந்தவர்கள் அதிமுக" என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், தஞ்சாவூர் மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை' - அம்பேத்கர் மக்கள் இயக்கம்