புதுக்கோட்டை: தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்று பணியாற்றி வருகிறார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் எப்போது தீவிர அரசியலுக்கு வருவார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா? என திமுக நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகள் பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
அதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி, பல்வேறு இடங்களில் தனது பிரச்சாரத்தை சிறப்பாக மேற்கொண்டார் உதயநிதி. மத்திய அரசின் திட்டமான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாமல் இருந்ததை, பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லும் விதத்தில், எய்ம்ஸ் என்ற வாசகத்துடன் ஒரே ஒரு செங்கலை கையில் உயர்த்தி பிடித்து, சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறதோ, அதேபோல் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் திமுக மூத்த முன்னோடிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் பெரும் செல்வாக்கு இருந்து வருவதாக கூறுகின்றனர்.
மேலும், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கு மாவட்ட முழுவதும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்லும் பொழுது, திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தும் வருகின்றனர். இந்த நிலையில் கட்சியின் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு இடங்களில் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியும் கட்சிக்கு வந்தாலும், அவர்களையும் நாங்கள் வரவேற்போம் என பல்வேறு கூட்டங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி புதுக்கோட்டை நகரப் பகுதிகளில் ஒருபடி மேலே சென்று, திமுகவில் விரைவில் உதயமாகிறது 'இன்பநிதி பாசறை' என்கின்ற சுவரொட்டி, நகர் பகுதியில் முழுவதும் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. அந்த சுவரொட்டியில் 'எதிர்காலமே' எனக் குறிப்பிட்டு, 'இன்பநிதி பாசறை' என்ற பெயரில், செப்டம்பர் 24ஆம் தேதி மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என போஸ்டர்கள் அச்சடித்து நகரம் முழுவதும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுருந்தனர்.
மேலும் அந்த போஸ்டர்களில், "மண்ணைப் பிளக்காமல் விதைகள் முளைப்பதில்லை. போராட்டக்களமின்றி வெற்றி கிடைப்பதில்லை" என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இந்த போஸ்டர்கள் திமுக தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்த போஸ்டரை அச்சடித்து ஒட்டிய புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வடவாளம் மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதாகக் கருதி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.
அதன்படி திமுக நிர்வாகிகள் இருவரும், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் திருமுருகன் உள்ளிட்டோர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்த சம்பவம் திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இன்பநிதிக்கு பாசறை அமைத்ததால் தன்னை கட்சியை விட்டு திமுக தலைமை நீக்கிய நிலையில், சேலத்தில் நடந்த இளைஞர் அணி மாநாட்டில் இன்பநிதியை மேடையில் அமர வைத்திருந்தனர் எனவும் திருமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருமுருகன், "15 ஆண்டு காலமாக திமுகவில் இருந்து கட்சிக்காக உழைத்ததாகவும், இன்பநிதி பாசறை ஆரம்பித்ததற்காக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை நீக்கிய காரணத்தினாலும், தற்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததாகவும்" பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - 21 தொகுதி ஒதுக்கீடா? முழுத் தகவல்!