வேலூர்: வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியார் பூங்கா எதிரே உள்ள கோட்டை சுற்றுச்சாலையில், தெற்கு காவல் நிலைய போலீசார் நேற்று (அக்.4) மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த காரை நிறுத்திய போலீசார், காரின் ஆவணங்கள் மற்றும் லைசன்ஸ் உள்ளிட்டவற்றைக் காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு ஆவணங்கள் கையில் இல்லை என்றும், செல்போனில் இருப்பதாகவும் காரில் வந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதனால் செல்போனில் உள்ள ஆவணங்களை காரை ஓரம் நிறுத்திவிட்டுக் காண்பியுங்கள் என போலீசார் கூறியுள்ளனர். ஆனால், அந்த நபர் காரை நடுரோட்டில் நிறுத்திவிட்டு போலீசாரிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
நடுரோட்டில் நிறுத்தப்பட்ட காரால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அங்கிருந்த இளைஞர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், "காரில் வந்த நபர் உரிய ஆவணங்களைக் காண்பிக்காததால், வாகனத்தை பறிமுதல் செய்வோம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதற்கு அந்த நபர், "வண்டி அடிபட்டு ஷோரூமில் இருந்து வந்து இரண்டு நாள் தான் ஆகிறது, வண்டியில் ஆவணங்கள் இல்லை” என்றுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை ஏர்போர்ட்டில் 6 கிலோ தங்கம் பறிமுதல்.. அயன் பட பாணியில் தொடரும் சம்பவம்!
மேலும், எஸ்ஐ ஒருவர் பேசும் போது, "முதலில் ஒருமையில் பேசிவிட்டு தற்போது சார் என்று மரியாதையாக பேசுகிறீர்கள். இப்ப எதற்காக பம்புகிறீர்கள் என்று கேட்க", காரில் வந்த நபர் இங்கு இருப்பவர்கள் வீடியோ எடுக்கிறார்கள், அதனால் தான் என்று பதில் கூறுகிறார்.
பின்னர் அந்த நபர், நான் எஸ்பியிடம் பேசுகிறேன் எனக் கூறி போலீசாரிடம் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு பதிலளித்த போலீசார்,"யாரிடம் வேண்டுமானாலும் பேசுங்கள். அதற்கு முன்னடி வண்டியை ஓரம் எடுத்து விடுங்கள் என்று போலீசார் கெஞ்சியும், அதனை பொருட்படுத்தாத அந்த நபர்," நாளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறேன் என்றும், நீங்கள் காரை பறிமுதல் செய்து எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறுகிறார்.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் பேச்சுவார்த்தை நடத்தி, காரை ஓரமாக நிறுத்தச் சொல்லியதை அடுத்து, அந்த நபர் காரை ஓரமாக நிறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, காரில் வந்த நபர் குறித்து போலீசார் விசாரித்த போது, அவர் ஒடுக்கத்தூர் அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்த திமுகவின் ஒன்றியக் குழு உறுப்பினர் சுதாகர் என்பது தெரியவந்தது.
இதற்கிடையே, திமுக பிரமுகர் வாக்குவாதம் செய்ததைப் பார்த்த சில இளைஞர்கள், வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்