சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில், திமுக தரப்பில் போட்டியிட விரும்புபவர்கள் அதற்கான விருப்ப மனுக்களை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் சமர்பித்து வருகின்றனர். இதுவரை 400க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு பெறப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, அமைச்சர் கே.என்.நேரு மகன் அருண் நேரு, தருமபுரி மாவட்டச் செயலாளர் பழனியப்பன் ஆகியோரும் விருப்ப மனு அளித்துள்ளனர். அந்த வகையில், இன்றும் ஏராளமானோர் விருப்ப மனுக்களை அளித்தனர்.
அதில் அமைச்சர் துரைமுருகன் மகனும், தற்போதைய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த், மீண்டும் வேலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, தொண்டர்கள் சூழ அண்ணா அறிவாலயத்திற்கு வந்து விருப்ப மனுவை சமர்பித்தார்.
இதே போல, சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அப்பாவு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தார். அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் அமைச்சர் காந்தியின் மகனும், திமுகவின் சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளருமான வினோத் காந்தி போட்டியிட விருப்பம் தெரிவித்து, வர்த்தக அணி சார்பில் விருப்ப மனு சமர்பிக்கப்பட்டது. விருப்ப மனுக்கள் அளிக்க நாளை இறுதி நாள் என்பதால், நாளை சில முக்கிய நபர்கள் விருப்ப மனு சமர்பிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சனாதன விவகாரம்: உதயநிதி, சேகர்பாபு, ஆ.ராசா தகுதி நீக்கத்திற்கு அவசியம் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்!