சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக இன்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்று மதியம் தேமுதிக வழக்கறிஞர் ஜனார்த்தனன், தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவைச் சந்தித்து மனு அளிக்க வந்தார். அப்போது பேசிய அவர், "நேற்று மின்னஞ்சல் (e-mail) வழியாகவும், தபால் வழியாகவும் விருதுநகர் தொகுதியில் நடைபெற்ற முறைகேடு குறித்து புகார் மனு அளித்தோம்.
இதனிடையே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புகார் மனு அளித்துள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். இதை அறிந்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தனக்கு எந்த விதமான தகவலும் வரவில்லை எனவும், அவ்வாறு முறைகேடு நடந்திருந்தால் நீதிமன்றத்திற்குத்தான் செல்ல வேண்டும் எனவும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
ஆனால், நாங்கள் நேற்றே தலைமை தேர்தல் அதிகாரிக்கும், விருதுநகர் தேர்தல் அதிகாரிக்கும் மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பிவிட்டோம். நாங்கள் அனுப்பிய மனு அவர்களுக்குச் சென்று விட்டது. ஆனால், அவர்கள் இன்னும் எங்களுக்கு வரவில்லை என்று கூறுகிறார்கள். எனவே, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்திருக்கிறோம்.
அதேபோல், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியைச் சந்தித்து மனு கொடுப்பதற்கு தேமுதிக சார்பாக வழக்கறிஞர் அங்கே சென்றுள்ளார். இந்த முறைகேடானது விருதுநகர் தொகுதியில் மிகப்பெரிய அளவிற்கு நடந்துள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை சரியாக நடைபெறவில்லை. எனவே, மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை.
இதனை மையமாக வைத்துதான் நாங்கள் இன்று மனு கொடுத்துள்ளோம். விரைவில் இதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். காலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ஊடகங்களிடம் கொடுத்த தகவல் தவறானது. நாங்கள் நேரில் பார்த்து புகார் அளிக்க வந்தோம். ஆனால், தலைமை தேர்தல் அதிகாரி நேரில் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை.
எனவே, அவருக்கு கீழ் உள்ள அதிகாரியிடம் மனுவை கொடுத்திருக்கிறோம். தேர்தல் ஆணையத்திடம் அளித்த இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால், நிச்சயமாக நீதிமன்றத்திற்குச் செல்வோம். அதை தவிர வேற எந்த வழியும் இல்லை" எனக் கூறினார்.
பின்னர், மறு வாக்கு எண்ணிக்கை குறித்து நீதிமன்றத்தில் தான் முறையிட வேண்டும் என்று சத்யபிரதா சாகு கூறியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "மறு வாக்கு எண்ணிக்கைக்கு முதலில் தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். எனவே இவரிடம் மனு அளித்துள்ளோம், அதேபோல, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.
இவர்கள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த மறுத்தால், நாங்கள் கட்டாயம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாள் இரவு 9.30 மணிக்கு வேட்பாளர் விஜயபிரபாகரன் மற்றும் தேமுதிக கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் அங்கிருந்த அதிகாரிகள் 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று கூறி ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விட்டனர்.
ஆனால், வெற்றி பெற்ற வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு இரவு 1 மணிக்குத்தான் வெற்றி பெற்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. அங்கு ஆளும் கட்சியைச் சேர்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி ஆகிய அமைச்சர்கள் மற்றும் சில மாவட்ட நிர்வாகிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்திருந்தனர்.
மேலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரைக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் அதிகாரி அடிக்கடி வெளியே சென்று அலைபேசியில் சிலரிடம் பேசினார். இது அனைத்துமே அங்கிருக்கும் கேமராக்களில் பதிவாகியுள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அப்பொழுதே புகார் அளித்த நிலையில், தேர்தல் முறையாகத்தான் நடைபெறுகிறது என்று தெரிவித்து தங்களை தொந்தரவு செய்யாதீர்கள்" என கூறியதாக ஜனார்த்தனன் கூறினார்.
இதையும் படிங்க: "விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை" - பிரேமலதா விஜயகாந்த் அடுக்கும் காரணங்கள்!