தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பொதுமக்கள் குடும்பத்தினருடன் புத்தாடை, பட்டாசு, இனிப்புகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தஞ்சவூரில் சமூக ஆர்வலர் பிரபுராஜ்குமார் காலையில் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டு இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கியுள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்: அந்த பரிசில் ஆயிரம் ரூபாய் வைத்து பிரித்து பார்க்குமாறு கூறி தூய்மைப் பணியாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களை கெளரவப்படுத்தும் நோக்கில் இதைச் செய்தோம். தீபாவளியை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்கள் இந்த தொகையைப் பயன்படுத்தி புத்தாடை வாங்கிக் கொள்ளலாம். நமது சுத்தம், சுகாதாரத்திற்காக பாடுபடும் அவர்களுக்கு இது ஒரு சிறிய பரிசாகும்” என்றார்.
இதையும் படிங்க: தஞ்சாவூர்: தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு புத்தாடை.. பாரம்பரிய வரவேற்புடன் அசத்திய தனியார் அறக்கட்டளை!
“இந்த பணம் உங்களுக்கு தான்”: இதைப் பெற்ற தூய்மைப் பணியாளர் ஒருவர் கூறுகையில், “இந்தப் பரிசை பிரிக்கும் போது பயமாக இருந்தது, ஆனால் பிரித்து பார்த்தபோது புத்தம் புதிய 100 ரூபாய் நோட்டுகள் 10 இருந்தது. இந்த பணம் உங்களுக்கு தான் எனக் கூறி தீபாவளி வாழ்த்துகள் கூறினார். என்னைப் போல் 30 நபர்களுக்கு இது போன்ற தீபாவளி சர்ப்ரைஸ் கிப்ட் வழங்கியுள்ளார்” என்றார்.
நலத்திட்ட உதவிகள்: இதேபோல், தஞ்சை தம்பிரான்குடில் மற்றும் கோபுரம் பவுண்டேஷன் இணைந்து தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் ஆயிரம் பேருக்கு சேலை, வேட்டி, பேண்ட், சட்டை மற்றும் காலணிகள் வழங்கின.
இதில் எம்பி முரசொலி, எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மற்றும் தம்பிரான் குடில் அறக்கட்டளை ரிசபானந்தர் சுவாமிகள், பவுன்டேசன் தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்