தஞ்சாவூர்: கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா பிரசித்தி பெற்றது. இவ்விழா வருகிற 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, விழா குறித்த முன்னேற்பாடுகள், தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள், புதிதாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கும் வகையில், நேற்று (ஆக.31) மாலை கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மகாமக கூட்டரங்கில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது.
இதில், தஞ்சை மாவட்ட திட்ட அலுவலர் பாலகணேஷ், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை எம்பி ஆர்.சுதா, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.280 கோடிக்கு பல்வேறு திட்டங்களுக்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகளைச் செய்திடவும், சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகளை மேம்படுத்திட, சீரமைக்க ஏதுவாக ரூ.1,200 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதுபோலவே மின்வாரியம் சார்பில், கும்பகோணம் மாநகராட்சி எல்லையில் இரு துணை மின் நிலையங்கள் அமைக்கவும், கொரநாட்டுக்கருப்பூரில் ஒரு துணை மின் நிலையம் அமைக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும், முக்கிய இடங்களில் புதைவடம் அமைக்கவும், கூடுதல் மின் மாற்றிகள் அமைக்கவும் ஏதுவாக ரூ.400 கோடி அளவிற்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில், காவிரி மற்றும் அரசலாறு உள்ள 53 படித்துறைகளைச் சீரமைக்க மகாமக குளம், பொற்றாமரை குளம் தூர்வாரி, புதிய ஆற்று மண் நிரப்பி விழா நாட்களுக்கு முன்பும், பின்பும் ஒன்றரை அடி உயர நீரை குளத்தில் சீராக கண்காணித்து பராமரிக்கவும், தொடர்ந்து குளத்திற்கு நீர் வரவும், வெளியேறவும் போதுமான வசதிகள் ஏற்படுத்துதல் வரை ரூ.90 கோடிக்கு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.
தற்போது வரை திட்ட மதிப்பீடுகளை ஒரு சில அரசுத் துறைகள் மட்டும் தயார் செய்துள்ளது. இதற்கு முதற்கட்டமாக, ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி தேவைப்படும் என தெரிய வந்துள்ளது. இக்கூட்டத்தில் பேசிய கும்பகோணம் எம்எல்ஏ, "சுற்றுலாத்துறை என் கண்ணிற்கு தெரியவில்லை. காரணம், கும்பகோணத்தில் தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான ரிவர்சைடு ரிசார்ட் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அரசிற்கு எந்தவித வருமானமும் இன்றி பூட்டியே கிடக்கிறது.
தற்போது அந்த இடம் வெளவால்கள் வாழும் இடமாகவும், பேய், பிசாசுகள் வாழும் இடமாகவும் இருப்பது அவ்வழியேச் செல்லும் போது காண்பதற்கு வேதனையாக உள்ளது. இதனை இதுவரை கண்டுகொள்ளாமல் செயல்படும் சுற்றுலாத்துறை அலுவலர்களை கடிந்து கொண்டார்.
அதுபோலவே, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் என்ன தான் வேகமாக செயல்பட்ட போதும், இந்த துறையில் உள்ள அலுவலர்களின் மெத்தனமான செயல்பாட்டால், கடந்த 2004ஆம் ஆண்டு மகாமகத்தின் போது தொடங்கப்பட்ட சுற்றுவட்ட சாலைப் பணி மூன்று மகாமகங்களை கடக்கும் நிலையிலும், இன்னும் அது முழுமை பெறவில்லை. இது எந்த மகாமகத்தில் நிறைவு பெறும் என்பது யாரும் தெரியாத நிலையே உள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "2028ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய மகாமக விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த முதற்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்பிலும் திட்டமதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டது. இந்த திட்ட மதிப்பீடுகளை அரசுக்கு அனுப்பி வைப்போம்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : 100 அடி கம்பத்தில் தவெக-வின் பிரம்மாண்ட கொடி..தேனியில் கொண்டாட்டம்! - theni tvk flag