சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இந்த நிலையில், பொதுத்தேர்வின்போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விவரங்கள் இன்று (பிப்.28) அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வின்போது அச்சடித்த புத்தகங்கள், கையேடுகள் அல்லது கையெழுத்துப் பிரதி ஏதேனும் வைத்திருந்து, அதனை தாமாகவே அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தல் போன்ற செயலில் ஈடுபட்டால், முதன்மைக் கண்காணிப்பாளரால் எச்சரிக்கை செய்யப்படுவார். மேலும், தேர்வர் இத்தவறினை அதே பருவத்தில் மீண்டும் செய்தால், அவரிடமிருந்து எழுத்துப்பூர்வ விளக்கம் பெற்று வெளியேற்றப்படுவார். அடுத்து வரும் தேர்வுகளை எழுத தடையில்லை.
தேர்வர்கள் அச்சிடப்பட்ட புத்தகங்கள், கையேடுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் துண்டுச் சீட்டுகள் ஏதேனும் தன்வசம் வைத்திருப்பதை அறைக் கண்காணிப்பாளரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை தேர்வர்கள் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்தால், அது குறித்து தேர்வரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்று, மையத்தை விட்டு முதன்மைக் கண்காணிப்பாளரால் வெளியேற்றப்படுவார். அடுத்து வரும் தேர்வுகளை எழுத தடையில்லை.
தேர்வர் ஆட்சேபனைக்குரிய பொருட்களை தன்வசம் வைத்திருந்து, அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது கண்டறியப்பட்டால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்படும். தேர்வர் ஆட்சேபனைக்குரிய பொருட்களை தன்வசம் வைத்திந்து பயன்படுத்தி இருந்தால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், மேலும் அடுத்த ஓராண்டு, அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும்.
தேர்வர், மற்ற தேர்வரின் விடைத்தாளை பார்த்து தேர்வெழுதியிருந்தாலோ அல்லது பிறரின் உதவியினை தேர்வறைக்கு உள்ளேயோ அல்லது வெளியில் இருந்து பெற்றது கண்டறியப்பட்டாலோ, அதற்கு தேர்வரிடமிருந்து எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்று மையத்தை விட்டு முதன்மைக் கண்காணிப்பாளரால் வெளியேற்றப்படுவார். அடுத்து வரும் பாடத் தேர்வுகளை எழுத தடையில்லை. தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் ஓர் ஆண்டு அல்லது அடுத்த இரு பருவத் தேர்வுகளுக்கும் அதிகமான பருவங்கள் தேர்வெழுத தடை விதிக்கப்படும்.
ஒரு தேர்வர் துண்டுத்தாளை தன்வசம் வைத்திருந்து பார்த்து எழுதியிருந்தாலோ, எழுத முயற்சி செய்தது கண்டறியப்பட்டாலோ அவருக்கு அப்பருவத்தில் எழுதிய அனைத்து பாடத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதுடன், குற்றத்தின் தன்மை மற்றும் ஆவணங்களின் அடிப்படையில், அடுத்த இரு பருவங்களுக்கும் தேர்வெழுத தடை விதிக்கப்படும்.
தேர்வர்கள் அல்லது அவரைச் சார்ந்த நபர்கள் தேர்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொண்டு உதவி பெற நிர்பந்தித்து இருந்தால், அந்த மாணவருக்கு, அப்பருவத் தேர்வு தடை செய்யப்பட்டு, சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வரை தேர்வெழுத தடை விதிக்கப்படும்.
ஆள்மாறாட்டம் செய்தால், அப்பருவத்தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும். விடைத்தாளை பரிமாற்றம் செய்தால், தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன், சூழ்நிலை மற்றும் சான்றுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட பருவங்கள் தேர்வெழுதத் தடை விதிக்கப்படும்.
தேர்வறை கண்காணிப்பாளரிடம் தேர்வறையில் அல்லது தேர்வறைக்கு வெளியில் தவறாக நடந்து கொண்டால் (தகாத வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதல்), அந்த மாணவர் முதன்மைக் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், பிற பாடத் தேர்வுகளும் எழுத தடை விதிக்கப்படுவார் அல்லது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதுடன், குறிப்பிட்ட பருவங்கள் தேர்வு எழுத தடை, நிரந்தரத் தடை விதிக்கப்படும்.
விடைத்தாளை தேர்வு அறைக்கு வெளியே எடுத்துச் செல்வது அல்லது அறைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றுவிட்டு உடனடியாக திரும்ப வந்து ஒப்படைத்தாலும், ஒப்படைக்காவிட்டாலும், தேர்வறையில் விடைத்தாளை கிழித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், மாணவர் முதன்மைக் கண்காணிப்பாளரால் எச்சரிக்கை செய்யப்பட்டு, அப்பாடத் தேர்வு ரத்து செய்யப்படும்.
வினாத்தாளை வெளியில் அனுப்பினால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் அதாவது அடுத்தடுத்த ஆறு பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படும். அறைக் கண்காணிப்பாளர் அல்லது முதன்மைக் கண்காணிப்பாளரிடம் விளக்கம் அளிக்க மறுத்தால், அப்பாடத்தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், அடுத்து வரும் பாடத் தேர்வுகளும் எழுத தடை விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட தண்டணைகள் அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.