சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளில் முதலாம் ஆண்டில் இதற்கு முன் விண்ணப்பிக்காதவர்கள் ஜூலை 3 முதல் 5 வரை TNGASA இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மாணவர்கள் சேர்க்கையை ஜூலை 8ஆம் தேதி முதல் கல்லூரியின் முதல்வர்கள் நடத்தலாம் எனவும் கல்லூரிக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 164 கலை மற்றம் அறிவியில் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்வதற்கு மே 6ஆம் தேதி முதல் 25 வரையில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் பதிவு செய்த ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் மே 27ஆம் தேதி அனுப்பப்பட்டது.
அதனைத் தாெடர்ந்து, மே 28 முதல் 30 வரையில் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர் படை, பாதுகாப்புப்படை வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10ஆம் தேதி முதல் 15 வரையிலும், 2ம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24 முதல் 29ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ஆம் தேதி துவங்குகிறது. மேலும், மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் பல்கலைக்கழகங்களில் ஒரே நேரத்தில் வகுப்புகளை துவங்கி தேர்வுகளை நடத்தும் வகையில் அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அரசு, அரசு உதவிபெறும், தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த பிரிவுகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கைக்கும் உயர்கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி அரசுக் கல்லூரிகளில் கலைப்பிரிவில் 20 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீதமும், அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும், தனியார் கல்லூரிகளில் தேவை மற்றும் ஆய்வக வசதிக்கு ஏற்ப 10 சதவீதமும் கூடுதலாக சேர்ககலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக் கல்வி இயக்குனர்: இந்த நிலையில், கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ''தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீதம் மாணவர் சேர்க்கை நடை பெற்றுள்ளது. எஞ்சியுள்ள இடங்களில் சில பாடப்பிரிவுகளில் மாணவர்களுக்கு இடம் இல்லாத நிலையும், சில இனப் பிரிவுகளில் மாணவர்கள் இல்லாத நிலையும் உள்ளது. கல்லூரி திறக்கப்பட்டு மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.
கல்லூரியில் காலியாக உள்ள மாணவர் சேர்க்கை இடங்களை முழுவதுமாகப் பூர்த்தி செய்யும் வகையில் ஜூலை 3ந் தேதி முதல் 5ந் தேதி வரையில் TNGASA என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு கல்லூரியில் உள்ள காலியிடங்களில் உரிய வழிகளின் படி 8ந் தேதி முதல் கல்லூரியின் முதல்வர்களே சேர்க்கையை செய்யலாம்.
ஏற்கனவே, இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்தாய்வுக்கு வராத நிலையில் தற்போது அவர்கள் கேட்கும் பாடப்பிரிவு காலியாக இருந்தால் கல்லூரி முதல்வர்களே முடிவு எடுத்து அவர்களுக்கு சேர்க்கை அளிக்கலாம். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் காலி இடம் இருப்பின் இந்தப்பிரிவில் விண்ணப்பம் ஏதும் இல்லாத நிலையில், அதனை பட்டியலின, பழங்குடி இனப் பிரிவில் காத்திருப்பவர்களை கொண்டு நிரப்பலாம். ஆனால், எஸ்சி, எஸ்டி பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டக் காலியாக உள்ள இடங்களில் மற்ற பிரிவினரைக் கொண்டு நிரப்பக்கூடாது.
ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறொரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். கல்லூரியில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட வேண்டும் என்பதையும், சேர விரும்பும் மாணவர்கள் யாவருக்கும் கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்'' என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் பாலி கிளினிக் இயங்கும் நேரம் அறிவிப்பு - என்னென்ன சேவைகள் பெறலாம்?